உரிமைத் தொழிலருளி என்றும், மொழிந்தருளி என்றும் இங்கு ஒருங்கு கூறியது, இதுவே முடிமன்னராந்தன்மை பற்றிய ஆட்சி முறை என்றறிவித்தற்கு; “முன்னாப், பணிவார் திறையும் பகைத்தவர் சின்னமுங் கொண்டுவண்டேர், அணிவார் முரசினொ டாலிக்கு மாவோ டணுகினரே” (330) என்ற திருக்கோவையாரினும் இக்கருத்தே பற்றிக் கூறுதல் காண்க. இனிப், பணிந்த அரசர் திறை கண்டு, பணியாதவர் அரணம்வினவி, அழிக்க ஏவிய இவ்வரசுரிமையின் இச்செயலே இச்சரித விளைவாகிப் பின்னர்த் தொண்டுநெறி நிற்றற் கேதுவாகி இவரை இறைவர் திருவடிச் செலுத்த நிற்கும் பிற்குறிப்பும் ஈண்டுக் கருதிக் கொள்க. |
தனித்திகிரி முறை நில்லா - தனி - பிறர் எவர்க்கும் உரிமையின்றித் தமக்கே உரிமையாகக் கொண்ட; திகிரி - அரச ஆணையாகிய சக்கரம்; திகிரிமுறை - அரசாணை நெறியினுட்பட்டு ; அரச ஆணையைச் சக்கரம் என்பது மரபு. |
உணர்வுநிறை மதிநீடு அமைச்சர் - உணர்வு - என்றது அரச நீதியின் அறிவு; மதி - அதனைக் கொண்டு செலுத்தும் அறிவு; நீடு - என்பது அனுபவம்; “மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம் , யாவுள முன்னிற் பவை” (குறள்). |
அமைச்சர் - இங்கு அமைச்சும், சேனைத் தலைமையும் உடையவர்களைக் குறித்தது. |
வழிநில்லா - என்பதும் பாடம். 14 |
3956. (வி-ரை) இங்குக் கூறியது எறிபத்த நாயனார் புராணத்துள் வந்ததும், இந்நாயனாரது சரிதத்தின் முற்பகுதியுமான வரலாறு; அங்கு விரித்தமையால் இங்குச் சுருக்கிச் சுட்டிக் கூறியமைந்தார். சிவகாமியார் சென்று - என்றும், சென்று சிதறும் களிற்றை என்றும், (எறிபத்தர்) சென்று எறிந்து என்றும் கூட்டி உரைக்கும்படி சென்று - என்பது முதனிலைத் தீபமாய் நிற்பது காண்க. |
சிவகாமியார் - சிவகாமியாண்டார் என்னும் அடியவர்; பூத்தொண்டு செய்பவர். “புண்ணிய முனிவர்” (558); சென்று கொணர் திருப்பள்ளித்தாமம் - (559 - 560.) “பறித்தமலர் கொடுவந்து” - “கடிமலர் தூயன தாங்கொணர்ந்து” (தேவா). |
சிதறும் - களிற்றை - பூக்கூடையினை அவர் கையினின்றும் பறித்துச் சிதறும் யானை; அரசரது பட்டத்து யானை - “பட்டவர்த் தனமாம் பண்பு, பெற்றவெங் களிறு” (561 - 562 - 563). |
களிற்றினை எறிந்து பாகரையுங்கொன்ற - 572 - 575 பார்க்க. |
என்னையும்.....கொடுத்து - 589 - 592 பார்க்க. |
திருத்தொண்டின் மிகச் சிறந்தார் - அரசச் சிறப்பினும் தொண்டின் சிறப்பு மிக்கது - மேம்பட்டது என்ற குறிப்பு. |
அன்று - முன்னாள். முன் (3955) கூறிய அரசு முறை நிகழ்வதற்கு முன்பு; முன் முறை கருவூரில் வந்தணைந்திருந்தபோது; “மாநவமி முன்னாள்” (561). |
வென்றி வடிவாள் - பகைவர்களை வென்றதோடன்றி அடிமைத் திறத்திலும் இந்தவாள் நீட்டும் செயல் இவருக்கு வென்றி பெறக் கருவியாய் உதவிற்று என்பது குறிப்பு. வென்றி - பகைவரை எறிந்தவென்றியும் தொண்டரைப் பணிந்தவென்றியும். |
மிக - முன்னையினும் மிக. குறிப்பு : இப்பாட்டுச் சில பிரதிகளில் இல்லை. 15 |
3957. | விளங்குதிரு மதிக்குடைக்கீழ் வீற்றிருந்து பாரளிக்கும் துளங்கொளிநீண் முடியார்க்குத் தொன்முறைமை நெறியமைச்சர் |