பதம் - எள்ளினின்று எண்ணெய் வெளிப்படும் பக்குவம்; பக்கம் எழ - செக்கு உரலின் பக்கங்களில் எண்ணெய் எடுத்துப் பிழியும்படி மேல்வர; உழந்து - வருந்தி உழைத்து; இது செக்கு உரலினிடத்துச் செய்யும் வேலை. |
பாண்டில் வரும் எருது உய்த்தும் - செக்கு ஆடுதற்கு வட்டமாகச் சுற்றி வரும் எருதுகளைச் செலுத்தியும்; இது செக்கின் புறத்தே செய்யும் வேலை. தக்கதொழில் - அத்தொழிலுக்கும் தாம் பணி நிறை வேற்றுதற்கும் தகுதியாகச் செய்யும் வினைத்திறம். |
தாழாமை - வழுவாமல்; காலத்தாலும், விளக்குக்களின் அளவாலும், செயல் வகையாலும், பிற எவ்வகையானும் குறைவு வாராமல். |
திலதயிலம் - திலம் - எள்; தயிலம் - திலத்தினின்றும் வரும் நெய்; எண்ணெய்; தயிலம் - என்றலே இப்பொருள் தருமாயினும், செக்கினுள் இடும் எள்ளினின்றும் பிரிந்து அதன் நெய் வேறுவரும் நிலையாதலின் அது குறிக்கத் தில - தயிலம் என்றார் - பக்கம் எழ - என்றதன் கருத்தும் இது. |
மிக்க திருவிளக்கு - மிக்க - ஏனை எல்லாவற்றையும் விளக்கும் சாதனமாதலால் சிறப்புமிக்க என்றார்; இது புறவிளக்கம், திருக்கோயிலில் இடுவதாதலின் திருவிளக்கு என்றார்; அது எல்லாவற்றினு முயர்ந்த ஞானம் பெறுதற்கேதுவாதலின் மேலைப் பயனாலும் மிக்கது; “விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞான மாகும்” (திருநேரிசை); இந்நாயனார் “சிவபுரியிற் பொலிந்திருக்க” (4037) என்ற பேறு பெறும் நிலையும் காண்க. |
விழுத்தொண்டு விளக்கிட்டார் - திருத்தொண்டின் திறம் இத்தகையதென உலகறிய விளக்கினர்; “புலப்படுப்பார்” (4029) என்றபடி இஃது இறைவரருளால் வந்தது. |
இங்குக் கூறிய செக்கு ஆட்டி எள்நெய் எடுக்கும் தொழிலும், முன்னர் கண்ணப்ப நாயனார் புராணத்தில் மாமிசம் எடுத்துப் பதமாக்கியதொழிலும், திருநாளை போவார் புராணத்தில் அவர்தம் மரபின் றொழிலும், திருக்குறிப்புத் தொண்டர் புராணத்துள் வண்ணார் தொழிலும் முதலிய இவை போன்றவற்றை உள்ளவாறு தன்மையணியில் வைத்து எடுத்துக்காட்டுதல் ஆசிரியர்க்கேயுரிய சிறந்த கவிநயமாம். 11 |
4033. | அப்பணியால் வரும்போறு மவ்வினைஞர் பலருளராய் எப்பரிசுங் கிடையாத வகைமுட்ட விடருழந்தே யொப்பின்மனை விற்றெரிக்கு முறுபொருளு மாண்டதற்பின் செப்பருஞ்சீர் மனையாரை விற்பதற்குத் தேடுவார், 12 |
4034. | மனமகிழ்ந்து மனைவியார் தமைக்கொண்டு வளநகரில் தனமளிப்பார் தமையெங்குங் கிடையாமற் றளர்வெய்திச் சினவிடையார் திருக்கோயிற் றிருவிளக்குப் பணிமுட்டக் கனவினுமுன் பறியாதார் கையறவா லெய்தினார். 13 |
4033. (இ-ள்) அப்பணியால்....முட்ட - அந்தத் தொழிலால் கிடைக்கும் கூலிப் பொருளும் அத்தொழில் செய்வோர் பலர் உளராதலினாலே எவ்வகையாலும் கிடைக்காதபடி முட்டுப்பாடு பொருந்தவே; இடருழந்தே - மிகவும் துன்பப்பட்டே; ஒப்பின்....மாண்டதற்பின் - ஒப்பற்ற பெருமையுள்ள தமது வீட்டினை விற்று எரிக்கும் அப்பொருளும் தீர்ந்தபின்; செப்பருஞ்சீர்......தேடுவார் - சொல்லுதற்கரிய, |