திய அந்தப் புண் நீங்கி ஒளிபெற்று விளங்க; உச்சியின்மேல்...நின்றவரை; உச்சியின்மேற் பொருந்திய கைகளை அஞ்சலித்தவராகி நின்ற அந்நாயனாருக்கு; பரமர் தாம்.....அருள்புரிந்தார் - சிவபெருமானார் அழகிய சிவலோகத்தில் விளங்க வீற்றிருக்கும்படி அருள் புரிந்தனர். 16 |
இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
4035. (வி-ரை) பணிகொள்ளும் - ஆட்கொண்டருளும்; பணி - திருப்பணி; இங்கு விளக்கிடும் பணி; பணியினை ஏற்றுக்கொள்வதே பேரருள் என்பது. “சீயேது மில்லாதென் செய்பணிகள் கொண்டருளும், தாயான வீசன்” (திருவா); பணி - பாம்பு என்று கொண்டு பாம்பினை அணியாகக் கொள்ளும் என்றலுமாம். |
படம்பக்க நாயகர் - திருவொற்றியூ ரிறைவரது பெயர்; “படம்பக்கங் கொட்டுந் திருவொற்றி யூரீர்” (நம்பி - தேவா - கோத் - கோவ - 6). உபமன்னிய முனிவரிடத்துச் சிவதீக்கை பெற்றுப் பூசித்த வாசுகி என்னும் மாநாகத்தைத் (வாசுகி - பூமியைத்தாங்கும் மாநாகங்கள் எட்டனுள் ஒன்று; பூமியைக் கிழக்குப் பக்கத்தில் தாங்குவதாகக் கூறுவது மரபு.) தம்முடைய பலகை போன்று விரிந்த திருமேனியில் ஒடுங்கக் கொண்டருளியதனாலும், அப்பாம்பி னுருவம் திருமேனியிற் காண விருப்பதனாலும் சுவாமி படம்பக்க நாதர் எனப்படுவர். தலவிசேடம் பார்க்க. (III - பக்கம் 571) சுவாமியின் திருவுருவம் விரிவுடைய புற்றாக அமைந்தது. இப் பதியில் ஆதிபுரீசர் சந்நிதி வேறு. கலிய நாயனார் திருவிளக்குப் பணி செய்து பேறடைந்தது படம்பக்க நாயகர் சந்நிதியாகும். |
அணிகொள்ளும் திருவிளக்கு - வரிசையாக அணிபெற ஏற்றப்படும் விளக்குக்கள். பணி மாறுதல் - திருப்பணிவிடை செய்தல்; இங்கு விளக்கு ஏற்றும் பணி குறித்து நின்றது. |
மணிவண்ணச் சுடர்விளக்கு - விளக்கின் சுடர் ஒவ்வொன்றும் ஒவ்வோர் மணி போன்று ஒளிவீசும் நிலை குறித்தது. மாளில் - செய்யப்படுதல் முட்டினால்; யான் மாள்வன் - நானும் உயிருடன் இராது மாளுவதே உறுதி. |
துணிவு உள்ளங்கொள நினைந்து - துணிதல் - தீர்மானித்தல்; நிச்சயித்தல். உள்ளங் கொள்ளுதல் - அத்துணிவினைச் செய்து முடிப்பேன் என்று மனத்தின் அழுத்துதல்; நினைதல் - நிறைவாக்க எண்ணுதல். |
அவ்வினை - விளக்கு மாளில் யான் மாள்வன் என்ற துணிவினை நிறைவேற்றும் அச்செயல். வினை - தொழில். |
தொடங்குவார் - தொடங்குவாராகி, முற்றெச்சம்; தொடங்குவாராகிப் - பரப்பி - மிடறரிய என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க. |
விளக்கு மாளில் யான் மாள்வன் எனத் துணிவு - தாம் தாம் நியமமாகச் செய்யும் சிவதருமங்கள் முட்டுப்படின் தாம் உயிர் வாழாது இறந்து படுதல் உயர்ந்தோர் மரபு. மூர்த்தி நாயனார் தமது சந்தனக் காப்புத்தரும்நியமத்திற்குத் தவறு நேர்ந்த போது மூளை வெளிப்படுமளவும் தமது முழங்கையினைக் கற்பாறையில் தேய்த்த வரலாறும்,அரிவாட்டாய நாயனார் தம்மிடற்றினை அரிந்ததும், பிறவும் இங்குக் கருதற் பாலன. |
4036. (வி-ரை) செயல் நிரம்ப - விளக்கிடும் செயலுக்கு வேண்டும் குறை நிரம்ப; திரியிடுதலும், அகல் பரப்புதலும் கூறினாராதலின் எஞ்சியது எண்ணெய் வார்த்தலேயாம்; அது நிரம்ப. |
ஒருவிய - கிடைக்கா தொழிந்த; ஒருவுதல் - நீங்குதல். |