1116. பையுடைய பாம்பொடுநீறு
பயில்கின்ற
மெய்யுடையான் வெண்பிறைசூடி
விரிகொன்றை
மையுடைய மாமிடற்றண்ணன்
மறிசேர்ந்த
கையுடையான் காதல்செய்கோயில்
கழுக்குன்றே. 5
1117. வெள்ளமெல்லாம்
விரிசடைமேலோர்
விரிகொன்றை
கொள்ளவல்லான் குரைகழலேத்துஞ்
சிறுத்தொண்டர்
உள்ளமெல்லா முள்கிநின்றாங்கே
யுடனாடும்
கள்ளம்வல்லான்
காதல்செய்கோயில்
கழுக்குன்றே. 6
_________________________________________________
5. பொ-ரை: நச்சுப் பையையுடைய
பாம்போடு திருநீறு அணிந்த திருமேனியை உடையவனும்,
வெண்பிறையையும், விரிந்த கொன்றையையும் முடியில்
சூடியவனும், விடம் பொருந்திய மிடற்றினை உடைய
தலைமையாளனும், மானேந்திய கையை உடையவனுமாகிய சிவபிரான்
விரும்பி உறையும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.
கு-ரை: அரவும் திருநீறும் பழகும் திருமேனியுடையவனும்,
பிறை கொன்றை இவற்றையணிந்த நீலகண்டனும், மானேந்திய
கையையுடையவனும் ஆகிய சிவபெருமான் இடம் கழுக்குன்று
என்கின்றது. பை - படம். மை - விடம்.
6. பொ-ரை: விரிந்த சடைமுடியின்மேல்
வெள்ளமாகப் பெருகி வந்த கங்கையின் அனைத்து
நீரையும் விரிந்த கொன்றை மாலையோடு சூடியிருப்பவனும்,
தனது ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடிகளை ஏத்தித்
துதிக்கும் சிறிய தொண்டர்களின் உள்ளமெல்லாம்
நிறைந்து, அவர்கள் தியானித்து நின்று ஆடத் தானும்
உடன் ஆடும் கள்ளம் வல்லவனுமாகிய, சிவபிரான் காதல்
செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.
|