105. திருவாரூர்
பதிக வரலாறு:
அப்பரடிகளால் ஆதிரைத் திருநாள் மகிமையைக்
கேட்டுத் திருவாரூருக்கு எழுந்தருள்கின்ற திருஞானசம்பந்தப்
பிள்ளையார், சலந்தரனை வென்ற தலமாகிய
விற்குடியை வணங்கிக்கொண்டு அடியார்கள் புடைசூழ
வருகின்றவர்கள், இப்பதிகத்தைப் பாடிக்கொண்டே
எழுந்தருள்கின்றார்கள்.
பண்: வியாழக்குறிஞ்சி
பதிக எண் : 105
திருச்சிற்றம்பலம்
1133. பாடல னான்மறையன் படிபட்ட
கோலத்தன் றிங்கள்
சூடலன் மூவிலைய
சூலம் வலனேந்திக்
கூடலர் மூவெயிலும்மெரியுண்ணக்
கூரெரிகொண் டெல்லி
ஆடல னாதிரையன்
ஆரூ ரமர்ந்தானே. 1
_________________________________________________
1. பொ-ரை: திருவாரூரின்கண் எழுந்தருளிய
இறைவன் பாடப்படும் நான்கு வேதங்களை அருளியவன்.
ஒப்பற்ற தோற்றத்தை உடையவன். திங்களை முடியிற்
சூடியவன். இலை வடிவமான முத்தலைச் சூலத்தை வலக் கரத்தே
ஏந்தித் தன் பகைவராக இருந்த அசுரர்களின்
முப்புரங்களையும் எரியுண்ணச் செய்தவன். மிக்க எரியைக்
கையில் ஏந்தி நள்ளிரவில் நடம் புரிபவன். திருவாதிரை
நாளை உகந்தவன்.
கு-ரை: இப்பாட்டு, தியாகேசப்
பெருமானது உரை, கோலம், அணி, வீரம் முதலியவற்றை
விளக்கியருளுகிறது. பாடலன் நான்மறையன் - பாடப்பெறுகின்ற
நான்கு வேதங்களையுடையவன். அன்தவிர்வழிவந்த
சாரியை. அன்றிப் பாடலன் நான் மறையன் எனப்
பிரித்துத் தோத்திரத் தமிழ் பாடல்களையும் நான்மறைகளையும்
|