1134. சோலையில் வண்டினங்கள்
சுரும்போ
டிசைமுரலச் சூழ்ந்த
ஆலையின் வெம்புகைபோய்
முகில்தோயும் ஆரூரில்
பாலொடு நெய்தயிரும் பயின்றாடும்
பரமேட்டி பாதம்
காலையு மாலையும்போய்ப்
பணிதல் கருமமே. 2
________________________________________________
உடையன் எனலுமாம். படிபட்ட கோலத்தன்.
எஞ்ஞான்றும் எவ்வகையிலும் ஒப்பில்லையாம்படியுயர்ந்த
திருமேனியழகினை யுடையான். சூடலன் - சூடுதலையுடையவன்.
கூடலர் - பகைவர்; திரிபுராரிகள். கூர் எரி - மிக்க
எரி. எல்லி - இரவு. ஆதிரையன் என்பது அப்பர் அடிகள்
தெரிவித்த சிறப்பு திருவுள்ளத்து நிற்றலான் எழுந்தது.
ஆரூரமர்ந்தான், பாடலன் முதல் ஆதிரையன் என்பது
இறுதியாகக் கூட்டி முடிவு காண்க.
2. பொ-ரை: சோலைகளில் வண்டுகளும்,
சுரும்புகளும் இசை முரலவும், சூழ்ந்துள்ள கரும்பாலைகளில்
தோன்றும் விரும்பத்தக்க புகை மேல் நோக்கிச் சென்று
வானத்திலுள்ள முகில்களில் தோய்வதுமான திருவாரூரில்
பால், நெய், தயிர் ஆகியவற்றை விரும்பி ஆடும் மேலான
இறைவன் திருவடிகளைக் காலை மாலை ஆகிய இரு
போதுகளிலும் சென்று பணிவது நாம் செய்யத்தக்க
கருமமாகும்.
கு-ரை: இப்பாட்டு இறைவனை
இருபோதும் வணங்கல் கடமையென்றறிவிக்கின்றது. வண்டினங்கள்
சுரும்போடிசைமுரல - வண்டின்சாதி நான்கில் வண்டும்
சுரும்பும் தம்மினத்தோடு மாறியொலிக்க. வண்டுஞ்
சுரும்பும் இசை முரல ஆலையின் வெம்புகை வானத்து
முகில்தோயும் ஆரூர் என்றது பரமேட்டி பாதம் பணிவார்
மங்கள வாத்தியம் ஒலிக்க இன்பவுலகடைவார் இது
உறுதி என்ற உள்ளுறை தோன்றநிற்கின்றது.
கருமம் - கடமை. பயின்று - விரும்பி.
பாலொடு நெய் தயிரும் எனப் பஞ்சகவ்வியத்துள் மூன்றே
கூறினார்கள்; இறைவன் ஆடுதற்குரியன இவையேயாதலின்,
கோசல கோமயம் நீக்கி மோரும் வெண்ணையும்
கொள்வார் இனம்பற்றி அவ்விரண்டும் கொள்க.
|