பக்கம் எண் :

1026திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1135. உள்ளமோ ரிச்சையினா லுகந்தேத்தித்

தொழுமின்றொண்டீர் மெய்யே

கள்ள மொழிந்திடுமின்

கரவா திருபொழுதும்

வெள்ளமோர் வார்சடைமேற்கரந்திட்ட

வெள்ளேற் றான்மேய

அள்ள லகன்கழனி

ஆரூர் அடைவோமே. 3

__________________________________________________

3. பொ-ரை: தொண்டர்களே! நீவிர் உள்ளத்தால் ஆராய்ந்தறிந்த விருப்போடு மகிழ்ந்து போற்றித் தொழுவீர்களாக. மறைக்காமல் உண்மையாகவே உம் நெஞ்சத்திலுள்ள கள்ளங்களை ஒழிப்பீர்களாக! காலை மாலை இருபோதுகளிலும் கங்கை வெள்ளத்தை ஒப்பற்ற நீண்ட தன் சடைமேல் மறையும்படி செய்தவனும், வெண்மையான ஆனேற்றை உடையவனுமான சிவபிரான் எழுந்தருளிய சேற்று வளம் மிக்க அகன்ற வயல்களால் சூழப்பெற்ற திருவாரூரை வழிபடுதற் பொருட்டு நாம் செல்வோம்.

கு-ரை: சென்ற திருப்பாட்டில் பணிதல் கருமமே எனப் படர்க்கையாக உணர்த்தியவர்கள் இத்திருப்பாட்டில் தன்மையில் வைத்து இருபொழுதும் அடைவோம் என்கின்றார்கள்.

உள்ளமோர் இச்சையினால் - மனத்தான் ஓர்ந்து இதுவே உறுதியெனக் கடைப்பிடிக்கப் பெற்ற இச்சையால்; அன்றி மந்ததரபக்குவர்க்காயின், ஏதோ ஒரு விருப்பத்தால் மகிழ்ந்து எனக் கொள்க. ஓர்: அசையுமாம். வெள்ளம் ஓர் வார்சடைமேல் கரந்திட்ட - வானுலகன்றித் தரணி தனக்கிடமாதல் தகாது எனத் தருக்கிவந்த கங்கையை ஒரு சடைக்கும் காணாது என்னும்படித் தருக்கடக்கி, இருக்குமிடமும் தெரியாதபடி மறைத்த. கரந்திட்ட என்றது - மறைத்தவன் வேண்டும் போது வெளிப்படுத்தும் வன்மையும் உடையவன் என்பது தோன்ற நின்றது.

வெள்ளேற்றான் - அறவடிவான வெள்ளிய இடபமுடையவன். தருக்கடக்கியதோடன்றித் தண்ணருளும் வழங்க இருக்கின்றான் என்பது சிந்தை கொள்ளக் கரந்திட்ட என்பதனையடுத்து வெள்ளேற்றான் என்பதனைத் தெரித்தார்கள்.