1136. வெந்துறு வெண்மழுவாட் படையான்
மணிமிடற்றா னரையின்
ஐந்தலை யாடரவ
மசைத்தா னணியாரூர்ப்
பைந்தளிர்க் கொன்றையந்தார்ப்
பரமன்
னடிபரவப் பாவம்
நைந்தறும் வந்தணையும்
நாடொறும் நல்லனவே. 4
__________________________________________________
4. பொ-ரை: அடியவர்களின் வினைகளை வெந்தறுமாறு
செய்யும் வெண்மையான மழுவாளைக் கையில் ஏந்தியவனும்,
நீலமணி போன்ற கண்டத்தை உடையவனும்,
இடையில் ஐந்து தலையுடையதாய ஆடும் பாம்பினைக் கட்டியவனும்,
அழகிய திருவாரூரில் பசுந்தளிர்களோடு கட்டிய
கொன்றை மாலையை அணிந்தவனுமாகிய பரமனுடைய
அடிகளைப் பரவ நம் பாவங்கள் நைந்து இல்லையாகும்.
நாள்தோறும் நமக்கு நல்லனவே வந்தணையும்.
கு-ரை: கீழைத்திருப்பாட்டில் தொண்டர்க்கு
உகந்தேத்தப் பணித்த பிள்ளையார், இத்திருப்பாட்டில்
அடைந்தார் அல்லல்களைய ஆயுதந்தாங்கி
இருக்கின்றார் என்பதையும், அடைந்தாரைப் பாதுகாத்த
அடையாளமாகக் கண்டத்துக் கறையுடையர் என்பதையும்
விளக்குகின்றார்கள்.
வெந்துறு வெண்மழு - அடியார்கள் வினை வெந்து
போதற்குக் காரணமாகிய கறையற்ற மழு. மழுவும், வாளும்
அடைந்தாரைக் காக்க ஏந்திய ஆயுதங்கள்
மணிமிடற்றாள் - நீலகண்டன்; இது கலங்கிய
தேவரைக் காத்த அடையாளம். அடியார்களுடைய ஐம்பொறிகளையும்
தத்தம் புலன்களில் செல்லவிடாது தடுத்தாட் கொள்ளும்
தன்மையைப்போல, ஆடுந்தன்மை வாய்ந்த ஐந்தலைப்
பாம்பைச் சேட்டியாதே திருவரையில் இறுகக் கட்டினான்
என்பது.
பாவம் நைந்தறும் - தீவினைகள் நைந்து
இல்லையாம். அடிபரவுவார் சிந்தை தீவினையை
மிகுவிக்காமையின் நல்லனவே வரும் என்பதாம்.
|