1141. செந்துவ ராடையினா ருடைவிட்டு
நின்றுழல்வார் சொன்ன
இந்திர ஞாலமொழிந்
தின்புற வேண்டுதிரேல்
அந்தர மூவெயிலும் அரணம்
மெரியூட்டி யாரூர்த்
தந்திர மாவுடையா
னவனெந் தலைமையனே. 10
__________________________________________________
பிரமன். நல்லியல் வாய்க்கப்பெற்றமையாலேயே
கபாலம் இறைவன் கரத்து ஏற்குங் கலமாக விளங்கிற்று.
நறவு - அமுதம். விஷ்ணு மார்பிலுள்ளது. அல்லியங்கோதை
- பூங்கோயில் பக்கத்துக் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும்
நீலோத்பலாம்பிகை. ஆகம் - திருமேனி.
10. பொ-ரை: செந்துவர் ஊட்டப்பட்ட
ஆடையை உடுத்தவரும், ஆடையின்றித் திகம்பரராய்த்
திரிபவரும் ஆகிய புத்த சமணர்கள் கூறிய மாயப் பேச்சுக்களைக்
கேளாது விடுத்து, இன்புற்று வாழ விரும்புவீராயின் வானத்தில்
திரியும் மூவெயில்களாகிய கோட்டைகளை எரியூட்டி
அழித்தவனும் திருவாரூரைத் தனக்கு நிலையான இடமாகக்
கொண்டவனுமாகிய சிவபிரானே எம் தலைவன் என்று வழிபடுவீர்களாக.
கு-ரை: புண்ணியனைத் தொழும் புண்ணியம் பெற்ற
நீங்கள், புறச்சமயிகள் கூறும் இந்திரஞாலம் நீங்கி,
இன்பம் பெற வேண்டின், ஆரூருடையானைத் தலைவனாக அறியுங்கள்
என்று அறிவித்தருள்கின்றார்.
செந்துவர் ஆடை - காவியாடை. சைன சந்நியாசிகளில்
காவியாடையுடுத்தியவரும், திகம்பர சந்நியாசிகளும்
என இருவகையார். இந்திரஞாலம் - இந்திரஞாலமான மாயப்பேச்சுக்கள்.
அந்தரம் - ஆகாயம். அரணம் - கோட்டை. ஆரூர் தம் திரமாவுடையான்
- ஆரூரைத் தமது நிலைக்களனாகக் கொண்டவன். திரம்
ஸ்திரம் என்பதன் திரிபு. சிவபூஜா துரந்தரர்களாகிய,
திரிபுராதிகள் தம் நிலை கெட்டது புத்தாவதாரங்கொண்ட
திருமாலின் இந்திர ஜாலப் பேச்சால். திருமால்
உபதேசம் மனத்தைக் கெடுத்தமையும், அதனால்
அசுரர்கள் அழிந்தமையும் ஆகிய வரலாற்றை நினைப்பூட்டுவது
இப்பகுதி.
|