1142. நல்ல புனற்புகலித் தமிழ்ஞான
சம்பந்தன் நல்ல
அல்லி மலர்க்கழனி
ஆரூர் அமர்ந்தானை
வல்லதோ ரிச்சையினால் வழிபாடிவை
பத்தும் வாய்க்கச்
சொல்லுதல் கேட்டல்வல்லார்
துன்பந் துடைப்பாரே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
11. பொ-ரை: தூயதான நீர்வளத்தை
உடைய புகலியில் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன்
அக இதழ்களையுடைய நல்ல தாமரை முதலிய மலர்கள் பூத்த
கழனிகளால் சூழப்பட்ட திருவாரூரில் எழுந்தருளிய
இறைவனைத் தனக்கியன்ற வல்லமையால் அன்போடு
பாடிய வழிபாட்டுப் பாடல்களாகிய இப்பதிகத்தைப்
பொருந்தச் சொல்லுதல் கேட்டல் வல்லவர்கள் துன்பம்
துடைப்பவர்களாவர்.
கு-ரை: அத்தகைய தலைவனாகிய ஆரூரமர்ந்தானை
மனங்கொண்ட மகிழ்ச்சியால் எழுந்த பாடல்கள் பத்தினையும்
பாடுவாரும் கேட்பாரும் துன்ப நீக்கம் பெறுவர் என்றுணர்த்துகிறது
திருக்கடைக்காப்பாகிய இறுதிப் பாடல். நல்லபுனல்
- கழுமலவள நதி. வழிபாடு பத்தும் - இப்பத்துப் பாடல்களுமே
வழிபாடு ஆகும் என்பதாம். வாய்க்கச் சொல்லுதல் கேட்டல்
- சொல்லும் வாயும், கேட்கும் செவியும், இவற்றை
இயக்கும் உள்ளமும் பிறவழி போகாது பொருந்தச்
சொல்லுதலும், கேட்டலும். துன்பந் துடைப்பார் - ஈரந்
துடைத்தார் என்பது போலத் துன்பம் இருந்த சுவடுந் தெரியாதபடித்
துடைப்பார் என்பதாம்.
ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை
மாதவத்தோர்
வாழவும் வையகத்தோர் உய்யவும்
மேதக்க
வானோர் வியப்பவும் - ஆதியாம்
வென்றிக் கலிகெடவும் வேதத் தொலிமிகவும்
ஒன்றிச் சிவனடியார் ஓங்கவும்
- துன்றிய
பன்னு தமிழ்ப்பதினா றாயிர நற்பனுவல்
மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் - முன்னிய
சிந்தனையாற் சீரார் கவுணியர்க்கோர் சேயென்ன
வந்தங் கவதரித்த வள்ளல்.
- நம்பியாண்டார் நம்பி. |
|