106. திருவூறல்
பதிக வரலாறு:
தக்கோலத்தை வணங்கி, தமிழ்மாலை சாத்திய
ஆளுடைய பிள்ளையார் திருவூறலை அடைந்தார். அங்கு
எழுந்தருளியுள்ள, இறைவனைப் பலமுறை வணங்கி,
"மாறிலவுணர் அரணம்" என்னும் பழுதில் செந்தமிழ்ப்பாமாலை
பாடினார்.
பண்: வியாழக்குறிஞ்சி
புதிக எண்: 106
திருச்சிற்றம்பலம்
1143. மாறி லவுணரரணம் மவைமாயவோர்
வெங்கணையா லன்று
நீறெழ வெய்தவெங்கள்
நிமல னிடம்வினவில்
தேற லிரும்பொழிலுந்
திகழ்செங்கயல்
பாய்வயலுஞ் சூழ்ந்த
ஊற லமர்ந்தபிரா
னொலியார்கழ லுள்குதுமே. 1
__________________________________________________
1. பொ-ரை: தமக்கு ஒப்பாரில்லாத வலிய
அவுணர்களின் அரணங்களாக விளங்கிய முப்புரங்களை
மறையுமாறு முற்காலத்தில் ஒரு வெங்கணையால் நீறுபடச்
செய்தழித்த எங்கள் நிமலன் ஆகிய சிவபிரான்
எழுந்தருளியுள்ள இடம், யாதென வினவில், தேன் நிறைந்த
பெரிய பொழில்களும், விளங்கிய செங்கயல்கள்
பாயும் வயல்களும், சூழ்ந்துள்ள திருவூறலாகும். அப்பெருமானுடைய
ஒலிக்கின்ற கழலணிந்த திருவடிகளை நாம் தியானிப்போம்.
கு-ரை: திரிபுரம் எரித்த
சிவபெருமான் இடம்யாதென்று வினாவினால், அது திருஊறலாம்;
அங்க எழுந்தருளியுள்ள இறைவன் கழலைத் தியானிப்போம்
என்கின்றது. அரணம் - கோட்டை. தேறல் - தேன்.
|