பக்கம் எண் :

 110. திருவிடைமருதூர்1057


இறுத்தவ னிருஞ்சினக் காலனைமுன்
செறுத்தவன் வளநகர் சிரபுரமே. 8

1182. வண்ணநன் மலருறை மறையவனுங்
கண்ணனுங் கழல்தொழக் கனலுருவாய்
விண்ணுற வோங்கிய விமலனிடம்
திண்ணநன் மதிலணி சிரபுரமே. 9

1183. வெற்றரை யுழல்பவர் விரிதுகிலார்
கற்றில ரறவுரை புறனுரைக்கப்
பற்றலர் திரிபுர மூன்றும்வேவச்
செற்றவன் வளநகர் சிரபுரமே. 10

_________________________________________________

கரிய அரக்கனாகிய இராவணனின் தலை தோள் ஆகியவற்றை நெரித்தவனும், மிக்க சினம் உடைய இயமனை அழித்தவனுமான சிவபிரானது வளநகர் சிரபுரமாகும்.

கு-ரை: மறுத்தவர் - பகைவர். கறுத்தவன் - சினந்தவன்.

9. பொ-ரை: செவ்வண்ணமுடைய நல்ல தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும், திருமாலும் தன் திருவடிகளைத் தொழுது நிற்குமாறு கனல் உருவாய் விண்ணுற ஓங்கி நின்ற விமலனாகிய சிவபிரானது இடம் உறுதியான நல்ல மதில்களால் அழகுறும் சிரபுர வளநகராகும்.

கு-ரை: வண்ணநன்மலர் - தாமரைமலர். திண்ணநன்மதில் - உறுதியாகிய மதில்.

10. பொ-ரை: ஆடையில்லாத இடையோடு திரிந்துழல்வோரும், விரித்த ஆடையைப் போர்வையாகப் போர்த்தியுள்ளவரும், மெய் நூல்களைக் கல்லாதவரும் ஆகிய சமண பௌத்தர்கள் அறவுரை என்ற பெயரில் புறம்பான உரைகளைக் கூறக்கேட்டு அவற்றைப் பொருட்படுத்தாதவனாய்ப் பகைவராகிய அவுணர்களின் முப்புரங்களும் தீயில் வேகுமாறு அழித்தருளிய சிவபிரான் எழுந்தருளிய வளநகர் சிரபுரமாகும்.