பக்கம் எண் :

 110. திருவிடைமருதூர்1061


1189. பொழிலவன் புயலவன் புயலியக்கும்
தொழிலவன் றுயரவன் துயரகற்றும்
கழலவன் கரியுரி போர்த்துகந்த
எழிலவன் வளநக ரிடைமருதே. 5

1190. நிறையவன் புனலொடு மதியும்வைத்த
பொறையவன் புகழவன் புகழநின்ற
மறையவன் மறிகட னஞ்சையுண்ட
இறையவன் வளநக ரிடைமருதே. 6

_________________________________________________

கு-ரை: பணைமுலை - பருத்தமுலை. ஒன்னார் - பகைவர். துணைமதிள் - திரிபுராதிகள் செய்யும் தீமைக்கெல்லாம் அரணாயிருந்து துணைபுரிந்த மதிள். கணை - அம்பு. அடுதிறல் - கொல்லும் வன்மை.

5. பொ-ரை: ஏழ் உலகங்களாக இருப்பவனும், மேகங்களாகவும் அவற்றை இயக்கி மழையைப் பெய்விக்கும் தொழிலைப் புரிவோனாக இருப்பவனும், துன்பங்களைத் தருபவனாகவும் அவற்றைப் போக்கும் கழலணிந்த திருவடிகளை உடையவனாக விளங்குபவனும், யானையின் தோலைப் போர்த்து மகிழ்ந்த அழகனாக விளங்குபவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருதாகும்.

கு-ரை: புயலவன் - மேகமாயுள்ளவன். புயலவனாய், அதனையியக்கும் தொழிலவனாய், துயரவனாய், துயரை அகற்றும் கழலவனாய், என்பன பொருளாயும், அதனையியக்கும் கருத்தனாயும் இருப்பவன் இறைவனே என்பதை விளக்கிற்று. ‘கரியுரிபோர்த்துகந்த எழிலவன் என்றது‘ செய்ய திருமேனிமேல் கரிய தோலைப் போர்த்தியதும் அழகாயிற்று என்பதாம்.

6. பொ-ரை: குறைவற்ற நிறைவாக விளங்குபவனும், கங்கையோடு திங்களைத் திருமுடியில் வைத்துச் சுமக்கும் சுமையை உடையவனும், புகழ் வடிவினனாக விளங்குபவனும், எல்லோராலும் புகழப்படும் வேதங்களாக விளங்குபவனும், சுருண்டு விழும் அலைகளை உடைய கடலின்கண் தோன்றிய நஞ்சினை உண்ட தலைவனும் ஆகிய சிவபிரானது வளநகர் இடைமருதாகும்.

கு-ரை: பொறையவன் - சுமையையுடைவன்.