111. திருக்கடைமுடி
பண் : வியாழக்குறிஞ்சி
பதிக எண்: 111
திருச்சிற்றம்பலம்
1196. அருத்தனை யறவனை யமுதனைநீர்
விருத்தனைப் பாலனை வினவுதிரேல்
ஒருத்தனை யல்லதிங் குலகமேத்தும்
கருத்தவன் வளநகர் கடைமுடியே. 1
1197. திரைபொரு திருமுடி திங்கள்விம்மும்
அரைபொரு புலியத ளடிகளிடம்
திரையொடு நுரைபொரு தெண்சுனைநீர்
கரைபொரு வளநகர் கடைமுடியே. 2
_________________________________________________
1. பொ-ரை: வேதப் பொருளாய் விளங்குபவனும்,
அறவடிவினனும், அமுதம்போல இனியவனும், மூத்தவனும்,
இளையோனும், உலக மக்கள் பலராலும் இவ்வொருவனையன்றித்
துணையில்லை என்று கருதி வழிபடும் முடிந்த
பொருளாயுள்ளவனும், ஆகிய பெருமான் எவ்விடத்தான்
என நீர் வினவுவீராயின் அவன் எழுந்தருளிய வளநகர்
கடைமுடி என்னும் தலமாகும். சென்று வழிபடுவீராக.
கு-ரை: நீர் பொருளாயுள்ளவனும்,
அறவடிவானவனும், அமுதனுமாகிய இறைவன் இடம்
வினவுவீராயின், அது கடைமுடி என்கின்றது. அருத்தன் -
பொருள்வடிவானவன். விருத்தன் - மூத்தவன். அருத்தனை.....உலகம்
ஏத்தும் ஒருத்தனை வினவுதிரேல் கருத்தவன் அல்லது
வளநகர் கடைமுடியே எனக் கூட்டுக. இதன் கருத்து அத்தகைய
ஒருவனை வினவுதிராயின் அவன் தியானிப்பார் கருத்தினை
இடமாகக் கொண்டவன். அன்றியும், கடைமுடியும் இடமாக்கியவன்
என்பதாம்.
2. பொ-ரை: ஒளியால் விம்மித் தோன்றும்
பிறைமதி, அலைகள் ஒன்றோடு ஒன்று மோதும் கங்கை
ஆகியவற்றை உடைய திருமுடியை உடையவரும், இடையில்
புலித்தோலைப் பொருந்த அணிந்தவருமாகிய அடிகள்
எழுந்தருளிய இடம், அலைகளோடு நுரைகள் பொருந்திய தெளிந்த
சுனைநீர் கரைகளில் வந்து மோதும் வளநகராகிய கடை
முடியாகும்.
|