பக்கம் எண் :

 111. திருக்கடைமுடி1067


1200. மறையவ னுலகவன் மாயமவன்
பிறையவன் புனலவ னனலுமவன்
இறையவ னெனவுல கேத்துங்கண்டம்
கறையவன் வளநகர் கடைமுடியே. 5

1201. படவர வேரல்குற் பல்வளைக்கை
மடவர லாளையொர் பாகம்வைத்துக்
குடதிசை மதியது சூடுசென்னிக்
கடவுள்தன் வளநகர் கடைமுடியே. 6

__________________________________________________

5. பொ-ரை: வேதங்களை அருளியவனும், அனைத்துலகங்களும் ஆகியவனும், மாயை வடிவினனும், சடைமுடியில் பிறை கங்கை ஆகியவற்றை அணிந்தவனும், கையில் அனல் ஏந்தியவனும் உலக மக்கள் இறைவன் எனப் போற்றும் நீல கண்டனுமான சிவபிரானது வளநகர் கடைமுடியாகும்.

கு-ரை: ‘எல்லாமாயிருப்பவன் இறையவன்‘ என உலகேத்துங் கண்டங்கரியவன் இடம் கடைமுடி என்கின்றது.

மறையவன் - ஒலி வடிவானவன். உலகவன் - பொருட்பிரபஞ்சவடிவானவன். மாயம் அவன் - இவையிரண்டிற்கும் அடியாகிய சுத்தமும் அசுத்தமும் ஆன மாயையும் அவன். இறையவன் - எல்லா உயிர்களிலும் உள்ளும் புறமுந் தங்குதலையுடையவன். கறை - விடம்.

6. பொ-ரை: அரவின் படம் போன்ற அழகிய அல்குலையும் பலவகையினவான வளையல்களை அணிந்த கைகளையும் உடைய உமை யம்மையை ஒரு பாகமாக வைத்து, மேற்குத் திசையில் தோன்றும் பிறை மதியைச் சூடிய சடைமுடியினனாய் விளங்கும் கடவுளின் வளநகர் கடைமுடியாகும்.

கு-ரை: உமாதேவியை யொருபாகம் வைத்து, பிறையைச் சூடும் முடியையுடைய கடவுள்நகர் இது என்கின்றது.

பட அரவு ஏர் - அரவின் படத்தையொத்த. மடவரலாள் - உமாதேவி. குட திசைமதி - இளம்பிறை. பிறை மேற்கின்கண்ணே தோன்றுமாதலின் இங்ஙனம் கூறினார்.