112. திருச்சிவபுரம்
பதிக வரலாறு:
21-ஆம் பதிகம் பார்க்க.
பண் : வியாழக்குறிஞ்சி
பதிக எண்: 112
திருச்சிற்றம்பலம்
1207. இன்குர லிசைகெழும் யாழ்முரலத்
தன்கர மருவிய சதுரனகர்
பொன்கரை பொருபழங் காவிரியின்
தென்கரை மருவிய சிவபுரமே. 1
1208. அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப்
பொன்றிட வுதைசெய்த புனிதனகர்
வென்றிகொ ளெயிற்றுவெண் பன்றிமுன்னாள்
சென்றடி வீழ்தரு சிவபுரமே. 2
__________________________________________________
1. பொ-ரை: இனிய ஒலியும் இசையும்
பொருந்திய யாழ் முரலுமாறு தனது கரத்தின்கண்ணே
அதனை ஏந்தி விளங்கும் சதுரனது நகர், அழகிய கரையினை
மோதும் பழமையான காவிரியாற்றின் தென்கரையில்
விளங்கும் சிவபுரமாகும்.
கு-ரை: யாழேந்திய கரத்தன் நகர்
சிவபுரம் என்கின்றது. முரல - ஒலிக்க.
2. பொ-ரை: முற்காலத்தில் மார்க்கண்டேயன்
பொருட்டு வலிய காலனைக் காலால் அழியுமாறு உதைத்தருளிய
புனிதனதுநகர், தனது கோரைப் பல்லால் வெற்றி பெறும்
வெள்ளைப் பன்றியாகத் திருவவதாரம் கொண்ட திருமால்,
முற்காலத்தில் வந்து திருவடியைப் பணிந்து வழிபாடு
செய்த தலமாகிய சிவபுரமாகும். (திருமால் வெண்ணிறப்
பன்றியாகத் திருஅவதாரம் செய்த செய்தி தேவாரத்திலேயே
உள்ளது. திவ்வியப் பிரபந்தத்தில் இல்லை.)
கு-ரை: மார்க்கண்டற்காகக் காலனையுதைத்தவன்
நகர் இது
|