பக்கம் எண் :

1074திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1214. எழின்மலை யெடுத்தவல் லிராவணன்றன்
முழுவலி யடக்கிய முதல்வனகர்
விழவினி லெடுத்தவெண் கொடிமிடைந்து
செழுமுகி லடுக்கும்வண் சிவபுரமே. 8

1215. சங்கள வியகையன் சதுர்முகனும்
அங்கள வறிவரி யவனகர்தான்
கங்குலும் பறவைகள் கமுகுதொறும்
செங்கனி நுகர்தரு சிவபுரமே. 9

__________________________________________________

இருந்த இடமாம் என்கின்றது. ஆவில் ஐந்து - பஞ்சகவ்யம். அரிவை - உமாதேவி. பூவில் வண்டு கண்ணயர்ந்திருக்கும் பொய்கையிலே, அன்னச்சேவல் தன் பெடையைப்புல்லும் சிவபுரம் என்பதாம்.

8. பொ-ரை: அழகிய கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த வலிய இராவணனின் முழுமையான வல்லமையை அடக்கிய முதல்வனாகிய சிவபிரானது நகர், விழாக் காலங்களில் எடுக்கப்பட்ட வெண்மையான கொடிகள் நிறைந்து கரிய மேகங்களை நெருங்கிச் செறியும் வளமையான சிவபுரமாகும்.

கு-ரை: இராவணனின் வலியடக்கிய முதல்வன்நகர் இது என்கின்றது. எழில்மலை - அழகியகைலை. உற்சவத்தில் உயர்த்திய கொடிகள் மேகத்தையணுகும் சிவபுரம் என விழாச் சிறப்பும், கொடியின் உயரமும் உரைத்தவாறு.

9. பொ-ரை: சங்கேந்திய கையினனாகிய திருமாலும் நான்முகனும் முற்காலத்தில் அடிமுடி தேடி அளந்தறியப் பெறாத சிவபிரானது நகர், இரவிலும் பறவைகள், கமுக மரங்கள் தோறும் தங்கிச் செங்கனிகளை நுகரும் வளம் மிக்க சிவுபுரமாகும்.

கு-ரை: அயனும்மாலும் அறியப்பெறாதவன் நகர் இதுவாம் என்கின்றது. சங்கு அளவியகையன் - பாஞ்சசன்யம் என்னும் சங்கு கலந்த கையையுடையவன்.

அளவு - உயரமும், ஆழமும் ஆகிய புற அளவு. இரவிலுங் கூடப் பறவைகள் கமுகுதோறும் பழநுகரும் நகர் என்று இருபோதும் பறவைக்கு உபகாரப்படுவது உரைக்கப்பெற்றது.