1216. மண்டையிற் குண்டிகை மாசுதரும்
மிண்டரை விலக்கிய விமலனகர்
பண்டமர் தருபழங் காவிரியின்
தெண்டிரை பொருதெழு சிவபுரமே. 10
1217. சிவனுறை தருசிவ புரநகரைக்
கவுணியர் குலபதி காழியர்கோன்
தவமல்கு தமிழிவை சொல்லவல்லார்
நவமொடு சிவகதி நண்ணுவரே. 11
திருச்சிற்றம்பலம்
10. பொ-ரை: உண்கலன் குண்டிகை ஆகியனவற்றை
ஏந்தியவராய், மாசேறிய உடலினராய்த் தருக்கொடு
திரியும் சமணர்களை வெறுக்கும் சிவபிரானது நகர்,
பழமையான காலந்தொட்டே ஓடி வந்து வளம் சேர்க்கும்
பழங்காவிரியின் அலைகள் வந்து பொருந்தும்
சிவபுரமாகும்.
கு-ரை: புறச்சமயிகளை விலக்கிய விமலன்
நகரிதுவாம் என்கின்றது. மண்டை - உண்கலம். மாசு -
அழுக்கு. பண்டு அமர் தரு பழங்காவிரி - முன்னமே வளந்தரும்
பழங்காவிரி எனப் பழமைக்கு எல்லை கூறியவாறு.
11. பொ-ரை: சிவபெருமான் எழுந்தருளிய
சிவபுர நகரைப் போற்றிக் கவுணியர் குலபதியாகிய
காழியர் தலைவன் ஞானசம்பந்தன் பாடிய தவத்தைத்
தருவனவாகிய இப்பதிகத் தமிழை ஓத வல்லவர் புதுமைகள்
பலவும் பெற்று முடிவில் சிவகதி சேர்வர்.
கு-ரை: சிவபுரத்தைக் காழிநாதன் கூறிய
பாடலைச் சொல்ல வல்லவர் சிவகதி சேர்வர் எனப்
பயன் கூறியது. நவம் - புதுமை.
|