1222. சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும்வண்ணம்
நேர்ந்தவ னேரிழை யோடுங்கூடித்
தேர்ந்தவர் தேடுவார் தேடச்செய்தே
சேர்ந்தவ னுறைவிடந் திருவல்லமே. 5
1223. பதைத்தெழு காலனைப் பாதமொன்றால்
உதைத்தெழு மாமுனிக் குண்மைநின்று
விதிர்த்தெழு தக்கன்றன் வேள்வியன்று
சிதைத்தவ னுறைவிடந் திருவல்லமே. 6
_________________________________________________
கு-ரை: தம் அடியை வணங்குவாரைத் திருமகள்
வணங்க வைத்து, உலகம் உய்யப் பெருமழை பெய்யச் செய்தவன்
உறைவிடம் வல்லம் என்கின்றது. கொய்த அம் மலரடி -
கொய்த அழகிய மலரையணிந்த திருவடி. கூடுவார்தம்மை
- தியானிப்பவர்களை. தவழ் திருமகள் - நிலையாமல்
தவழ்ந்துகொண்டேயிருக்கின்ற இலட்சுமியை.
5. பொ-ரை: தன்னைச் சார்ந்தவர்கட்கு
இன்பங்கள் தழைக்குமாறு நேரிய அணிகலன்களைப் பூண்டுள்ள
உமையம்மையாரோடு அருள் வழங்க இசைந்துள்ளவனும் தன்னைச்
சேர்ந்த சிவஞானியர்க்கும் பிறவாறு தேடுபவர்க்கும்
அவர்களைத் தேடுமாறு செய்து அவர்கட்கு உள்ளிருந்து
அருள் செய்பவனுமாகிய சிவபெருமானது உறைவிடம் திருவல்லமாகும்.
கு-ரை: சார்ந்தவர்க்கு இன்பநல்கி,
பார்வதியோடும் இருப்பவனும், தெளிந்தாரும் தேடுவாரும்
தேடச்செய்தே அவர்களிடம் சேர்ந்திருப்பவனும்
ஆகிய சிவன் இடம் இது என்கின்றது. சார்ந்தவர்க்கு
- திருவடியே சரண் என்று சார்ந்த ஞானிகட்கு. நேர்ந்தவன்
- திருவுளம் பற்றியவன்; தேர்ந்த ஞானியரையும் தேடச்செய்து
அவர்கட்குப் பாலினெய்போலவும் தேடுவாரைத் தேடச்செய்து
விறகின் தீப்போலவும் தோன்றி நிற்பவன்.
6. பொ-ரை: சினந்து வந்த எமனை இடக்
காலால் உதைத்துத் தன்னை வணங்கி எழுந்த மார்க்கண்டேயனுக்கு
உண்மைப் பொருளாய் எதிர்நின்று அருள் செய்தவனும்,
விதிர்த்தெழு கோபத்தால் படபடத்துத் திட்டமிட்டுச்
செயற்பட்ட தக்கனது வேள்வியை முற்காலத்தில் சிதைத்தவனும்
ஆகிய சிவபிரானது இடம் திருவல்லமாகும்.
|