1226. அன்றிய வமணர்கள் சாக்கியர்கள்
குன்றிய வறவுரை கூறாவண்ணம்
வென்றவன் புலனைந்தும் விளங்கவெங்கும்
சென்றவ னுறைவிடந் திருவல்லமே. 10
1227. கற்றவர் திருவல்லங் கண்டுசென்று
நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன
குற்றமில் செந்தமிழ் கூறவல்லார்
பற்றுவ ரீசன்பொற் பாதங்களே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
கு-ரை: பெரியவன், சிறியவர்கள்
தியானித்தற்கு அரியவன், வேதமும் அங்கமும் ஆனான்,
அயனும் மாலுங்காண ஒண்ணாத தெரியவன்நகர் இது
என்கின்றது. தெரியவன் - தெரியநிற்பவன்.
முனைப்படங்கிய முத்தான்மாக்களுக்கு விளங்கி
நிற்பவன் என்பதாம்.
10. பொ-ரை: கொள்கைகளால்
மாறுபட்ட சமணர்களும் புத்தர்களும் அறம் குன்றிய
உரைகளைக் கூறாவாறு, ஐம்புலன்களையும் வென்றவனும்,
எங்கும் விளங்கித் தோன்றுபவனும் ஆகிய
சிவபிரான் உறைவிடம் திருவல்லமாகும்.
கு-ரை: சமணரும், புத்தரும் அறமிலா
உரை பேசாவண்ணம் ஐம்புலன்களையும் வென்றவன் நகர்
வல்லம் என்கின்றது. அன்றிய - மாறுபட்ட. அறம்
குன்றிய உரை என மாறுக.
11. பொ-ரை: கற்றவர்கள் வாழும்
திருவல்லத்தைத் தரிசித்துச் சென்று
நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தன் பாடிய குற்றமற்ற
இச்செந்தமிழ்ப் பதிகத்தைக் கூற வல்லவர்கள்
சிவபிரானுடைய அழகிய திருவடிகளை அடைவர்.
கு-ரை: ஞானசம்பந்தப் பெருமான்
திருவல்லத்தைக் கண்டு சொன்ன குற்றம் இல்
செந்தமிழ்ப் பாடலாகிய இவற்றைக் கூறவல்லவர்
ஈசன் பாதங்களைப் பற்றுவர் என்கின்றது. கண்டு
சென்று சொன்ன என்பதால் இப்பதிகம்
திருவல்லத்தை வழிபட்டுப்போன பின்பு
சிவனந்தாநுபவம் சிந்தையில் நிறைய
ஆக்கப்பெற்றதாகும் என்பது அறியப்பெறும்.
|