115. திருஇராமனதீச்சரம்
பதிக வரலாறு:
திருப்பனையூரை வணங்கிவருகின்ற
சிரபுரச்செல்வர் திருஇராமனதீச்சரத்தை அடைந்து
"சங்கொளிர்" என்னும் இப்பதிகத்தையருளிச்
செய்தார்.
பண் : வியாழக்குறிஞ்சி
பதிக எண்: 115
திருச்சிற்றம்பலம்
1238. சங்கொளிர் முன்கையர் தம்மிடையே
அங்கிடு பலிகொளு மவன்கோபப்
பொங்கர வாடலோன் புவனியோங்க
எங்கும னிராமன தீச்சரமே. 1
1239. சந்தநன் மலரணி தாழ்சடையன்
தந்தம தத்தவன் றாதையோதான்
அந்தமில் பாடலோ னழகனல்ல
எந்தவ னிராமன தீச்சரமே. 2
__________________________________________________
1. பொ-ரை: சங்கு வளையல்கள் அணிந்த
முன்கைகளை உடைய முனி பன்னியர் வாழும்
வீதிகளிடையே சென்று அங்கு அவர்கள் இடும் பலியை
மகிழ்வோடு கொள்பவனும், சினம் பொங்கும்
அரவைப் பிடித்து ஆட்டுபவனும், உலக மக்கள்
உயர்வுபெற எங்கும் நிறைந்திருப்பவனுமாகிய
சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.
கு-ரை: முனிபன்னியர் இடும்பலியை
ஏற்பவனும், அரவு அணிந்தவனும், உலகமெலாம் உயர
எங்கும் மன்னியிருப்பவனும் ஆகிய சிவனிடம்
இராமனதீச்சரம் என்கின்றது. சங்கு - வளையல். அங்கு
- அசை. புவனி - பூமி.
2. பொ-ரை: அழகிய நல்ல மலர்களை
அணிந்து தாழ்ந்து தொங்கும் சடையினை உடையவனும்,
தந்தத்தையும் மதத்தையும் உடைய விநாயகப்
பெருமானின் தந்தையும், முடிவற்ற இசைப்பாடல்களைப்
பாடுபவனும், அழகனும், எங்கள் தவப்பேறாய்
விளங்கும் நல்லவனுமாய சிவபிரானது தலம்,
இராமனதீச்சரம்.
|