பக்கம் எண் :

1088திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1242. தாழ்ந்தகு ழற்சடை முடியதன்மேல்
தோய்ந்த விளம்பிறை துலங்குசென்னிப்
பாய்ந்தகங் கையொடு படவரவம்
ஏய்ந்தவ னிராமன தீச்சரமே. 5

1243. சரிகுழ லிலங்கிய தையல்காணும்
பெரியவன் காளிதன் பெரியகூத்தை
அரியவ னாடலோ னங்கையேந்தும்
எரியவ னிராமன தீச்சரமே. 6

1244. மாறிலா மாதொரு பங்கன்மேனி
நீறது வாடலோ னீள்சடைமேல்
ஆறது சூடுவா னழகன்விடை
ஏறவ னிராமன தீச்சரமே. 7

__________________________________________________

5. பொ-ரை: தலையில், தாழ்ந்த கூந்தலால் இயன்ற சடை முடியின்மேல், அழகு தோய்ந்த இளம்பிறை, பாய்ந்துவரும் கங்கை, படம் பொருந்திய அரவம் ஆகியவற்றைச் சூடிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.

கு-ரை: பிறையணிந்த சென்னியோடு கங்கை பாம்பு அணிந்தவன் நகர் இது என்கின்றது. ஏய்ந்தவன் - பொருந்தியவன்.

6. பொ-ரை: பிடரியின்மேல் விளங்கும் சுருண்ட கூந்தலினளாகிய உமையம்மை அருகிலிருந்து காணும் பெரியவனும், காளியின் பெரிய கூத்தோடு போட்டியிட்டு அவளால் அறிதற்கு அரியவனாய், நடனமாடுபவனும், அழகிய கையில் எரி ஏந்தி விளங்குபவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.

கு-ரை: பராசக்தி காணும் பெரியவன், காளியின் கூத்திற்கு அரியவன், ஆனந்தக் கூத்தன் நகர் இது என்கின்றது. சரிகுழல் - பிடரிமீது சரிந்த கூந்தல். இத்தலத்து இறைவிநாமம் சரியார் குழலி.

7. பொ-ரை: தனக்கு ஒப்பாரில்லாத அழகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும், திருமேனியில் திருநீற்றை அணிந்தவனும், நீண்ட சடைமுடியின்மேல் கங்கையைச் சூடியவனும் அழகனும், விடையின்மேல் ஏறி வருபவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.