117.திருப்பிரமபுரம்
பதிகவரலாறு:
வாக்கின்மன்னரை வழியனுப்பியபின்
காழித்திருஞான சம்பந்தப் பிள்ளையார் மீண்டும்
சீகாழியிற் புகுந்து, வேதவடிவாகிய
திருத்தோணியில் வீற்றிருந்த விண்ணவர்
பெருமானைப் பாடிப்பணிந்து, அங்கு
எழுந்தருளியிருக்கின்ற நாளில், செந்தமிழ்ப்
பாமாலையின் விகற்பங்களாகிய மொழிமாற்று,
மாலைமாற்று, திருவியமகம், ஏகபாதம்,
இருக்குக்குறள், எழுகூற்றிருக்கை முதலானவற்றை
அருளிச்செய்து, திருப்பாணனாரும் இசைவடிவான
மதங்கசூளாமணியாரும் இப்பதிகங்களை
ஏழிசைபற்றிப்பாடச் சீகாழியில்
எழுந்தருளியிருந்தார்கள்.
மொழிமாற்று
பண் : வியாழக்குறிஞ்சி
பதிக எண் : 117
திருச்சிற்றம்பலம்
1259. காட தணிகலங் காரர வம்பதி
காலதனில்
தோட தணிகுவர் சுந்தரக் காதினிற்
றூச்சிலம்பர்
வேட தணிவர் விசயற் குருவம்
வில்லுங்கொடுப்பர்
பீட தணிமணி மாடப் பிரம
புரத்தரரே. 1
__________________________________________________
1. பொ-ரை: பெருமைபெற்ற மணிகள்
இழைத்த மாட வீடுகளை உடைய பிரமபுரத்து அரனார்
இடுகாட்டைப் பதியாகக் கொள்வர். கரிய அரவினை
அணிகலனாகப் பூண்டவர். கால்களில் தூய சிலம்பை
அணிந்தவர். அழகிய காதில் தோடணிந்தவர்.
வேட்டுவ உருவம் தாங்கி அருச்சுனனுக்குப் பாசுபதக்
கணை அருளியவர்.
கு-ரை: மொழிமாற்று என்பது
பொருள்கோள்வகையுள் ஒன்று. பொருளுக்கு ஏற்பச்
சொல்லைப் பிரித்து முன்பின் கூட்டிக் கொள்வது.
|