119. திருக்கள்ளில்
பண் :வியாழக் குறிஞ்சி
பதிக எண்: 119
திருச்சிற்றம்பலம்
1282. முள்ளின்மேன் முதுகூகை முரலுஞ் சோலை
வெள்ளின்மேல் விடுகூறைக் கொடி விளைந்த
கள்ளின்மே யவண்ணல் கழல்க ணாளும்
உள்ளுமே லுயர்வெய்த லொருதலையே. 1
1283. ஆடலான் பாடலா னரவங்கள் பூண்டான்
ஓடலாற் கலனில்லா னுறை பதியால்
காடலாற் கருதாத கள்ளின் மேயான்
பாடெலாம் பெரியார்கள் பரசு வாரே. 2
__________________________________________________
1. பொ-ரை: முள்ளுடைய
மரங்களின்மேல் இருந்து முதிய கூகைகள் ஒலிக்கும்
சோலைகள் சூழ்ந்ததும், விளமரங்களின்மேல்
படர்ந்த கூறைக் கொடிகள் விளைந்து தோன்றுவதுமாய
கள்ளில் என்னும் இத்தலத்தில் எழுந்தருளிய
சிவபிரான் திருவடிகளை நாள்தோறும்
நினைவோமானால் உயர்வெய்துதல் உறுதியாகும்.
கு-ரை: கள்ளில் மேவிய கடவுளின்
கழல்களைத் தியானிக்க உயர்வெய்தல் துணிவு
என்கின்றது. முள்ளின்மேல் - முள் மரத்தின்மேல்.
வெள்ளில்மேல் - விளாவின்மேல். உள்ளுமேல் -
தியானிக்குமாயின். ஒருதலை - துணிவு.
2. பொ-ரை: ஆடல் பாடல்களில்
வல்லவனும், பாம்புகள் பலவற்றை அணிந்தவனும்,
தலையோட்டையன்றி வேறு உண்கலன் இல்லாதவனும்,
சுடுகாட்டைத் தவிர வேறோர் இடத்தைத் தனது
இடமாகக் கொள்ளதவனும் ஆகிய சிவபிரான்,
பெரியோர்கள் அருகிலிருந்து அவன் புகழைப் பரவக்
கள்ளில் என்னும் தலத்தைத் தான் உறையும்
பதியாகக் கொண்டுள்ளான்.
கு-ரை: ஆடல்பாடல் உடையவன்
உறைபதி கள்ளில், அதன் கண் மேயானுடைய
பெருமைகளைப் பெரியார்கள் பேசுவார்கள்
என்கின்றது. அரவம் - பாம்பு. கலன் - உண்கலன். பாடு -
பெருமை.
|