1291. ஆச்சியப் பேய்களோ டமணர் குண்டர்
பேச்சிவை நெறியல்ல பேணு மின்கள்
மாச்செய்த வளவயன்மல்கு கள்ளில்
தீச்செய்த சடையண்ணல் திருந்தடியே. 10
1292. திகைநான்கும் புகழ்காழிச் செல்வ மல்கு
பகல்போலும் பேரொளியான் பந்த னல்ல
முகைமேவு முதிர்சடையன் கள்ளி லேத்தப்
புகழோடும் பேரின்பம் புகுது மன்றே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
கு-ரை: ‘கள்ளின் மேயான் பெரியான்’ என்று
அறிவார்கள் இவனைப் பற்றி புகழ்வார்கள்
என்கின்றது. அறியாத ஒன்று பேசவா ராதாகலின்
பெரியான் என்று அறிவார்களே பேசுவர்
என்றார்கள். வரி - செவ்வரி. வையந்தன்னை உரிய
ஆய அளந்தான் - உலகத்தை உரித்தாக்க அளந்த
திருமால்.
10. பொ-ரை: பரிகசிக்கத்தக்க
பேய்கள் போன்றவர்களாகிய அமணர்களும்,
புத்தர்களும், கூறும் உரைகள் உண்மையான நெறிகளை
மக்கட்கு உணர்த்தாதவை. எனவே அவர்தம் உரைகளைக்
கேளாது விடுத்து, பெருமைக்குரிய வள வயல்கள்
நிறைந்த கள்ளிலில் விளங்கும் தீத்திரள்
போன்ற சடைமுடியை உடையசிவபிரானுடைய அழகிய
திருவடிகளையே பேணுவீர்களாக.
கு-ரை: புறச்சமயிகள்பேச்சு
நெறியற்றன; கள்ளில் இறைவன் திருவடியைச்
சிந்தியுங்கள் என்கின்றது. ஆச்சியப்பேய்கள் -
பரிகசிக்கத்தக்க பேய்கள். ஆச்சியம் ஹாஸ்யம்
என்பதன் திரிபு. மா - பெருமை.
11. பொ-ரை: நாற்றிசை மக்களாலும்
புகழப்பெரும் சீகாழிப் பதியில் செல்வவளம்
நிறைந்த பகல் போன்ற பேரொளியினனாகிய ஞான
சம்பந்தன், நறுமணம் கமழும் மலர் அரும்புகள்
நிறைந்த, முதிர்ந்த சடை முடி உடையவனாகிய
சிவபிரானது கள்ளிலைப் போற்றிப் பாடிய
இத்திருப்பதிகத்தைப் பாடி ஏத்தினால், புகழோடு
பேரின்பம் அடையலாம்.
கு-ரை: நாற்றிசையும் புகழ்பெற்ற
ஞானசம்பந்த சுவாமிகள் பதிகத்தைக்கொண்டு
கள்ளில்ஏத்தப் புகழோடு பேரின்பமும் பொருந்தும்
என்கின்றது. திகை - திசை. பகல் -சூரியன். பந்தன் -
நாம ஏகதேசம்.
|