121. திருவிடைமருதூர்
பதிக வரலாறு:
திருநாகேச்சரத்தை வணங்கிப்
பதிகம்பாடித் தொழுது, இடைமருதுக்கு எழுந்தருளிய
பிள்ளையாரை, அடியார்கள் எதிர்கொண்டு
அழைத்தனர். பிள்ளையார் முதலில் பரம்
பொருளானார் முதற்கோயிலைச் சென்று வழிபட்டனர்.
தமது கண்களில் ஆனந்தபாஷ்பம் வழிய அவனிமீது
விழுந்தெழுந்து, ‘நடைமரு திரிபுரம்’ முதலிய பல
பதிகங்களை அருளிச் செய்தனர்.
திருவிராகம்
பண்: வியாழக்குறிஞ்சி
பதிக எண்: 121
திருச்சிற்றம்பலம்
1304. நடைமரு திரிபுர
மெரியுண நகைசெய்த
படைமரு தழலெழ
மழுவல பகவன்
புடைமரு திளமுகில்
வளமமர் பொதுளிய
இடைமரு தடையநம்
மிடர்கெட லெளிதே. 1
__________________________________________________
1. பொ-ரை: இயங்குதலைப்
பொருந்திய திரிபுரங்களை எரியுண்ணுமாறு
சிரித்தருளித்தனது படைக்கலத்தால் தீ எழும்படி
செய்தருளிய வெற்றி மழுவேந்திய பகவனாகிய
சிவபிரான் எழுந்தருளியதும் அருகில் வளர்ந்துள்ள
மருத மரங்களில் இளமேகங்கள் தவழ்ந்து மழை
வளத்தை நிரம்பத் தருவதுமான திருஇடைமருதூரை
அடைந்தால் நம் இடர்கெடல் எளிதாகும்.
கு-ரை: திரிபுரம் தீயெழச்
சிரித்த மழுவேந்தியவனது இடைமருது அடைய நம் இடர்
கெடல் எளிது என்கின்றது. நடை மரு திரிபுரம் -
இயங்குதலை மருவிய முப்புரம். படை மரு தழல் எழு -
படைக் கலமாகப் பொருந்தித் தீயெழ. புடைமருது -
பக்கங்களிலுள்ள மருத மரங்கள். பொதுளிய. -
செறிந்த.
|