1308. வருநல மயிலன
மடநடை மலைமகள்
பெருநல முலையிணை
பிணைசெய்த பெருமான்
செருநல மதிலெய்த
சிவனுறை செழுநகர்
இருநல புகழ்மல்கு
மிடமிடை மருதே. 5
1309. கலையுடை விரிதுகில்
கமழ்குழ லகில்புகை
மலையுடை மடமகள்
தனையிட முடையோன்
விலையுடை யணிகல
னிலனென மழுவினோ
டிலையுடை படையவ
னிடமிடை மருதே. 6
__________________________________________________
5.
பொ-ரை: அழகோடு அசைந்து வரும் மயில் போன்ற
மடநடையினளாகிய மலையரையன் மகளும், பெரு நல
முலையாள் என்ற திருப்பெயருடையவளுமாகிய
அம்மையின் இருதன பாரங்களைக் கூடியவனும், போர்
செய்தற்குரிய தகுதியோடு விளங்கிய அவுணர்களின்
மும்மதில்களை எய்தழித்தவனும் ஆகிய சிவபிரான்
உறையும் இடமாகிய செழுமையான நகர் விரிந்த
புகழால் நிறைந்த திருஇடைமருதூர் ஆகும்.
கு-ரை: பெருநலமுலையம்மையோடு கூடிய
பெருமான் நகர் இடைமருது என்கின்றது. வருநல மயில்
அன மட நடை மலைமகள் - வருகின்ற மயிலன்ன சாயலையும்
அன்னம் போன்ற மடநடையையும் உடைய மலைமகள்.
பெருநலமுலையாள் இத்தலத்து இறைவியின் திருநாமம்.
செருநலமதில் - போர்நலம் வாய்ந்த முப்புரம்.
6. பொ-ரை: மேகலை சூழ்ந்த விரிந்த
ஆடையுடன் அகிற் புகையின் மணம் கமழும் கூந்தலை
உடைய மலையரையனின் மடமகளாகிய பார்வதி தேவியை
இடப்பாகமாக உடையவனும் விலை
|