பக்கம் எண் :

1132திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1311. மறையவ னுலகவன்

மதியவன் மதிபுல்கு

துறையவ னெனவல

வடியவர் துயரிலர்

கறையவன் மிடறது

கனல்செய்த கமழ்சடை

இறையவ னுறைதரு

மிடமிடை மருதே. 8

1312. மருதிடை நடவிய

மணிவணர் பிரமரும்

இருதுடை யகலமொ

டிகலின ரினதெனக்

கருதிட லரியதொ

ருருவொடு பெரியதொர்

எருதுடை யடிகள்தம்

இடமிடை மருதே. 9

__________________________________________________

8. பொ-ரை: வேதங்களை அருளியவனும் அனைத்துலகங்களாய் விளங்குபவனும், திங்களாகத் திகழ்பவனும், அறிவொடுபட்ட கலைத் துறைகளாக விளங்குபவனும் சிவபிரானேயாவன் என்று போற்றவல்ல அடியவர் துயரிலராவர். மிடற்றிற் கறையுடையவனும் கனல்போல் விளங்கும் சடையினனும் எல்லோர்க்கும் தலைவனும் ஆய அப்பெருமான் உறையும் இடம் இடைமருதாகும்.

கு-ரை: வேதியன், உலகெலாமாயவன் என்றெல்லாம் சொல்ல வல்ல அடியவர்கள் துயரிலர் என்கின்றது. செந்தீக் கொழுந்துபோலச் சுடர்விடும் சடையவன் என்க. மிடறது கறையவன் என மாறிக் கூட்டுக.

9. பொ-ரை: மருதமரங்களின் இடையே கட்டிய உரலோடு தவழ்ந்த நீலமணிபோன்ற நிறத்தை உடைய திருமாலும், பிரமனும் மிக்க பெருமையுடையவர் யார் எனத் தம்முள் மாறுபட்டவராய் நிற்க அவர்கள் இன்னதெனக் கருதற்கரிய பெரிய ஒளி உருவோடு தோன்றிய பெரிய விடையூர்தியனாகிய சிவபிரானது இடம் இடைமருதாகும்.