122. திருவிடைமருதூர்
திருவிராகம்
பண்: வியாழக்குறிஞ்சி
பதிக எண்: 122
திருச்சிற்றம்பலம்
1315. விரிதரு புலியுரி விரவிய வரையினர்
திரிதரு மெயிலவை புனைகணை யினிலெய்த
எரிதரு சடையின ரிடைமரு தடைவுனல்
புரிதரு மனனவர் புகழ்மிக வுளதே. 1
1316. மறிதிரை படுகடல் விடமடை மிடறினர்
எறிதிரை கரைபொரு மிடைமரு தெனுமவர்
செறிதிரை நரையொடு செலவில ருலகினில்
பிறிதிரை பெறுமுடல் பெறுகுவ தரிதே. 2
_________________________________________________
1. பொ-ரை: விரிந்த புலித்தோலை
ஆடையாக உடுத்த இடையினரும், வானகத்தில் திரிந்து
இடர்செய்த முப்புரங்களை ஆற்றல் பலவும் அமைந்த
கணையால் எய்தழித்தவரும் எரிபோன்ற சிவந்த
சடையினருமாகிய சிவபிரானார் உறையும் இடைமருதை
அடைய எண்ணும் மனம் உடையவர்க்குப் புகழ் மிக
உளதாகும்.
கு-ரை: புலித்தோலரையினராகிய
இறைவனது திருஇடைமருதினை அடைய விரும்பிய
மனத்தவர்க்குப் புகழ் மிகவுளது என்கின்றது.
திரிதரும் எயில் - திரிபுரம்.
2. பொ-ரை: சுருண்டு விழும் அலைகள்
உண்டாகும் கடலிடைத் தோன்றிய விடம் சேர்ந்த
மிடற்றினர் உறைவதும், காவிரியாற்று அலைகள்
கரைகளைப் பொருவதுமான இடைமருது என்னும் தலத்தின்
பெயரைச் சொல்லுவோர் உடலிடை அலைபோலத்
தோன்றும் தோலின் சுருக்கம், மயிரின் நரை ஆகியன
நீங்குவர். மீண்டும் இவ்வுலகில் உணவு உண்ணும்
உடலோடு கூடிய பிறவியை எய்தார்.
கு-ரை: நீலகண்டர் எழுந்தருளிய
இடைமருது என்று கூறுபவர் நரைதிரை எய்தார்; மீட்டும்
இவ்வுடலையும் எய்தார் என்கின்றது.
|