பக்கம் எண் :

1136திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1317. சலசல சொரிபுனல் சடையினர் மலைமகள்
நிலவிய வுடலினர் நிறைமறை மொழியினர்
இலரென விடுபலி யவரிடை மருதினை
வலமிட வுடனலி விலதுள வினையே. 3

1318. விடையினர் வெளியதொர் தலைகல னெனநனி
கடைகடை தொறுபலி யிடுகென முடுகுவர்
இடைவிட லரியவ ரிடைமரு தெனுநகர்
உடையவ ரடியிணை தொழுவதெம் முயர்வே. 4

__________________________________________________

பிறிது இரை பெறும் உடல் பெறுகுவது அரிது. வேறு உணவை உட்கொளும் இந்த அன்னமயகோசத்தை அடைவது அரிது; பிறவியில்லை என்பதாம்.

3. பொ-ரை: சலசல என்னும் ஒலிக்குறிப்போடு சொரியும் கங்கை ஆற்றைச் சடைமிசை அணிந்தவரும், மலைமகளை ஒருபாகமாகக் கொண்ட உடலினரும், நிறைவான வேதங்களை மொழிபவரும், உணவின்மையால் பசியோடுள்ளார் என மகளிர் இடும் பலியை ஏற்பவருமான சிவபிரான் உறையும் இடைமருதை வலம்வருபவர்க்கு வினைகளால் ஆகும் உடல் நலிவு இல்லையாம்.

கு-ரை: இடைமருதை வலம்வர வினைகளால் உடல் நலிவு இல்லையாம் என்கின்றது. புனல் - கங்கை. நிலவிய - விளங்கிய. உளவினையால் உடல் நலிவு இலது என இயைக்க.

4. பொ-ரை: விடையூர்தியை உடையவரும், வெண்மையான தலையோட்டை உண்கலன் எனக் கொண்டு பலகாலும் வீடுகள்தோறும் சென்று பலி இடுக என விரைந்து செல்பவரும், ஒருமுறை அன்பு செய்யின் விடுதற்கு அரியவரும், இடைமருது என்னும் நகரை உடையவரும் ஆகிய சிவபிரான் திருவடிகளைத் தொழுவதே எமக்கு உயர்வைத் தரும்.

கு-ரை: இடைமருதினை உடையவர் அடியிணை தொழுவது எம்முயர்வுக்கு வழியாம் என்கின்றது. வெளியது ஓர்தலை - பிரம கபாலம். கலன் - உண்கலன். முடுகுவர் - விரைவர். இடைவிடல் அரியவர் - ஆன்மாக்களால் இடைவிடாமல் எண்ணுதற்குரியவர் என்பது கருத்து.