பக்கம் எண் :

1140திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


பெருமானைப் பரவிய இத்திருப்பதிகத்தின் பத்துப் பாடல்களையும் பயில வல்லவர் வினைகளும் இடர்களும் இலராவர். அகன்ற வீட்டுலகம் அவர்கட்குச் சொந்தமாகும்.

கு-ரை: திருஞானசம்பந்தப் பெருமான் இடைமருதைப் பரவிய இப்பாடல் பத்தும் பயிலவல்லார் வினையும் இலர்; அவற்றால் வரும் துன்பமும் இலர் எனப் பயன் விளக்கிற்று. வியன் உலகு - அகன்ற சுவர்க்க பூமி.

திருத்தொண்டர் திருவந்தாதி

வையம் மகிழயாம் வாழ அமணர்வலிதொலைய
ஐயம் பிரம புரத்தாற் கம்மென் குதலைச்செவ்வாய்
பைய மிழற்றும் பருவத்துப் பாடப் பருப்பதத்தின்
தையல் அருள்பெற் றனன்என்பர் ஞானசம்பந்தனையே.

பந்தார் விரலியர் வேள்செங்கட் சோழன் முருகன்நல்ல
சந்தார் அகலத்து நீலநக் கன்பெயர் தான்மொழிந்து
கொந்தார் சடையர் பதிகத்தில் இட்டடி யேன்கொடுத்த
அந்தாதி கொண்ட பிரான்அருட் காழியர் கொற்றவனே.

- நம்பியாண்டார் நம்பி.

ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்

கோலப் புலமணி சுந்தர மாளிகைக் குந்தளவா
ரேலப் பொழிலணி சண்பையர்கோனை இருங்கடல்சூழ்
ஞாலத் தணிபுகழ் ஞானசம் பந்தனை நற்றமிழே
போலப் பலபுன் கவிகொண்டு சேவடி போற்றுவனே.

- நம்பியாண்டார் நம்பி.