பக்கம் எண் :

1142திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1327. இட்டம தமர்பொடி யிசைதலி னசைபெறு
பட்டவிர் பவளநன் மணியென வணிபெறு
விட்டொளிர் திருவுரு வுடையவன் விரைமலர்
மட்டமர் பொழில்வலி வலமுறை யிறையே. 2

1328. உருமலி கடல்கடை வுழியுல கமருயிர்
வெருவுறு வகையெழு விடம்வெளி மலையணி
கருமணி நிகர்கள முடையவன் மிடைதரு
மருவலி பொழில்வலி வலமுறை யிறையே. 3

_________________________________________________

2. பொ-ரை: மணம் கமழ்கின்ற மலர்கள் தேனோடு விளங்கும் பொழில் சூழ்ந்த வலிவலத்தில் உறையும் இறைவன், விருப்பத்தோடு அணியப் பெற்ற திருநீறு பொருந்தி இருத்தலின் பட்டோடு விளங்கும் பவளமணி போல் ஒளிவிடுகின்ற அழகிய ஒளி வீசும் திருமேனியை உடையவனாகத் தோன்றுகின்றான்.

கு-ரை: செம்மேனியில் திருநீறு அணியப் பெற்றமையால் பட்டோடு விளங்குகின்ற பவளமணிபோல ஒளிவிடுகின்ற திருவுருவுடையவர் இந்நகர் இறை என்கின்றது. இட்டம் - விருப்பம். நசை - விருப்பம். பட்டு அவிர் பவள நன்மணி என - பட்டோடு விளங்குகின்ற பவழமணி யென்றுசொல்ல.

3. பொ-ரை: மிகுதியான மணம் நிறைந்து விளங்கும் பொழில் சூழ்ந்த வலிவலத்தில் உறையும் இறைவன், தேவர்கள் அஞ்சத்தக்க கடலைக் கடைந்தபோது உலகில் உள்ள அனைத்துயிர்களும் அஞ்சத்தக்க வகையில் எழுந்த விடத்தை உண்டு, திருநீறு சண்ணித்த திருமேனி வெள்ளி மலை போல விளங்க அதனிடை நீலமணி பதித்தாற்போல் கரிய கண்டம் உடையவனாய் விளங்குபவன் ஆவான்.

கு-ரை: பாற்கடலைக் கடைந்தகாலத்து, உலகத்து உயிர்கள் யாவும் அஞ்சும்படித் தோன்றிய விடத்தை அமுது செய்தமையால் வெள்ளிமலையணிந்த நீலமணியை ஒத்த கழுத்தையுடையவன் இந்நகர் இறை என்கின்றது.

வெள்ளிமலை நீறுதோய்ந்த இறைவன் திருமேனிக்கும், நீலமணி அவன் கழுத்தில் விளங்கும் கறைக்கும் உவமை. மிடைதரு - நெருங்கிய. மரு - மணம்.