1329. அனனிகர்சடையழ லவியுற வெனவரு
புனனிகழ் வதுமதி நனைபொறி யரவமும்
எனநினை வொடுவரு மிதுமெல முடிமிசை
மனமுடை யவர்வலி வலமுறை யிறையே. 4
1330. பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே. 5
_________________________________________________
4. பொ-ரை: வலிவலம் உறை இறைவன்,
அனல் போன்ற சடையழலை அவிப்பதற்கென வருவது
போன்ற கங்கையையும், பிறையையும், பூ மொட்டுப்
போன்ற படப்புள்ளிகளை உடைய பாம்பையும் முடிமிசை
உடையவன் என்னும் நினைவோடு வரும் மனமுடைய அடியவர்
வாழும் சிறப்பினை உடையது வலிவலமாகும்.
கு-ரை: முடிமீது மனமுடையவர் வலிவலமுறை
இறைவர் என்கின்றது. அதற்குரிய ஏது கங்கையோ செந்தழல்
போன்ற சடையின் தீயை அவிக்க வருவதுபோலப்
பெருகிக்கொண்டிருக்கிறது. அக்கங்கையில் நனைந்த
அரவமும் நம்மால் விழுங்கத்தக்க மதி என நினைவொடும்
வருகின்றது. ஆதலால் இவை தருக்கும் பகையுமாறித் தத்தம்
எல்லையில் ஒடுங்க இறைவன் எப்போதும் தலைமேற்
சிந்தையராக இருக்கின்றார் என்ற நயந்தோன்றக்
கூறியது, அனல் நிகர் சடை அழல் அவியுற - நெருப்பை ஒத்த
சடையின் தீயானது தணிய. நனை பொறி அரவம் - நனைந்த
படப்புள்ளிகளோடு கூடிய பாம்பு. நனை - கூரிய என்றுமாம்.
5. பொ-ரை: மிகுதியாக வழங்கும் கொடையே
தமக்கு அழகைத் தரும் எனநினையும் வள்ளற்
பெருமக்கள் வாழும் வலிவலத்தில் உறையும் இறைவன்,
உமையம்மை பெண் யானை வடிவு கொள்ள, தான் ஆண் யானையின்
வடிவு கொண்டு தன் திருவடியை வணங்கும் அடியவர்களின்
இடர்களைக் கடியக் கணபதியைத் தோற்றுவித்தருளினான்.
கு-ரை: உமாதேவி பெண்யானையின்
வடிவுகொள்ள, ஆண்யானையின் வடிவத்தைத் தாம்கொண்டு
விநாயகப் பெருமான் அவதரிக்கத் திருவுள்ளம்பற்றிய
இறைவன் வலிவலநகரான் என்கின்றது. பிடி - பெண்யானை.
கரி - ஆண்யானை. வடிகொடு - வடிவத்தைக்
|