1333. இரவண னிருபது கரமெழின் மலைதனின்
இரவண நினைதர வவன்முடி பொடிசெய்து
இரவண மமர்பெய ரருளின னகநெதி
இரவண நிகர்வலி வலமுறை யிறையே. 8
1334. தேனமர்தருமல ரணைபவன் வலிமிகும்
ஏனம தாய்நில மகழரி யடிமுடி
தானணை யாவுரு வுடையவன் மிடைகொடி
வானணை மதில்வலி வலமுறை யிறையே. 9
__________________________________________________
முனிபன்னியர் வீடுகள்தோறும் சென்று
பலியேற்க வருபவன் வலிவலம் உறை இறை என்கின்றது.
தரை வர நலிதரும் நடை வரும் இடையவர் எனக்கொண்டு
கூட்டுக. மடவரலியர் - பெண்கள்.
8. பொ-ரை: தன்னை வழிபட்டு இரக்கும் தன்மையாளர்களாகிய
அடியவர்கட்குத் தன் மனத்தில் தோன்றும் கருணையாகிய நிதியை வழங்கும் வலிவலத்தில்
உறையும் இறைவன், இராவணனின் இருபது கரங்களையும்
அவனுடைய பத்துத் தலைகளையும் அழகிய கயிலை மலையின்கீழ்
அகப்படுத்திப் பொடி செய்து பின் அவன் இரந்துவேண்டி
நினைத்த அளவில் அவனுக்கு வேண்டுவன அளித்து இராவணன்
என்ற பெயரையும் அருளியவன்.
கு-ரை: இராவணன் செருக்கடங்க, விரல் நுதியை
யூன்றி அவன் இரக்க, மீட்டும் அருள் செய்தவன்
இவன் என்கின்றது. இரவணன் - இராவணன்; எதுகை நோக்கி
இடைகுறுகிற்று. இராவண்ணம் - இருக்காத வண்ணம்.
இரவணம் அமர் - அவன் அழுதலைப் பொருந்த. இரவு அண்ண
நிகர்......இறை - அடியார்கள் தத்தம் குறைகளைச்
சொல்லியாசிக்க அருளும் இறைவன்.
9. பொ-ரை: வானத்தைச் சென்றடையுமாறு
நெருக்கமாகக் கட்டப்பட்ட கொடிகளைக் கொண்ட மதில்களால்
சூழப்பட்ட வலிவலத்தில் உறையும் இறைவன், தேன் நிறைந்த
தாமரை மலர்மேல் உறையும் நான்முகன், வலிமைமிக்க
பன்றியுருவினனாய் நிலத்தை அகழும் திருமால் ஆகியோர்
முடியையும் அடியையும் காண முடியாதவாறு ஓங்கி உயர்ந்த
திருவுருவை உடையவன்.
கு-ரை: அயனும் மாலும் அறியாத
வடிவுடையான் வலிவலநாதன் என்கின்றது. ஏனம் - பன்றி.
மிடை - நெருங்கிய.
|