பக்கம் எண் :

1146திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1335. இலைமலி தரமிகு துவருடை யவர்களும்
நிலைமையி லுணலுடை யவர்களு நினைவது
தொலைவலி நெடுமறை தொடர்வகை யுருவினன்
மலைமலி மதில்வலி வலமுறை யிறையே. 10

1336. மன்னிய வலிவல நகருறை யிறைவனை
இன்னியல் கழுமல நகரிறை யெழின்மறை
தன்னியல் கலைவல தமிழ்விர கனதுரை
உன்னிய வொருபது முயர்பொருள் தருமே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

10. பொ-ரை: மலை போன்ற மதில்களால் சூழப்பட்ட வலிவலத்தில் உறையும் இறைவன், மிகுதியான மருதந்துவர் இலைகளால் பிழியப்பட்ட மிக்க துவர்நிறம் உடைய ஆடைகளை அணிந்த புத்தர்களும் நின்றுண்ணும் இயல்பினர்களாகிய சமணர்களும் நினைப்பதை அழித்துப் பொருட்டன்மையால் வலியவான பெருமை மிக்க வேதங்கள் தன்னைத் தொடருமாறு செய்தருளும் உருவினை உடையவனாய் உள்ளான்.

கு-ரை: சமணர் புத்தர்களுடைய நினைப்புத்தொலைய, வேதம் தேடும் வடிவினன் வலிவலநாதன் என்கின்றது. இலை மலிதர மிகு துவர் உடையவர்கள் - வாயில் வெற்றிலை மிக, காவியுடுத்த புத்தர்கள். நிலைமையில் உணலுடையவர்கள் - நின்றபடியே விழுங்கும் தேரர்கள்.

11. பொ-ரை: நிலைபேறுடைய வலிவல நகரில் உறையும் இறைவன்மீது இனிமையான இயல்பினை உடைய கழுமல நகருக்குத் தலைவனும் அழகிய வேதங்களையும் கலைகளையும் ஓதாமல் தானே உணர்ந்த தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் எண்ணி உரைத்த இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தும் உயர்வான வீடு பேறாகிய செல்வத்தை அளிக்கும்.

கு-ரை: வலிவல நாதனைக் கழுமலநாதனாகிய ஞானசம்பந்தன் சொல்லிய இந்தப் பத்து உரைகளும் உயர்ந்த பொருளைத் தரும் என்கின்றது. எழில்மறை தன்னியல் கலைவல தமிழ்விரகன் - அழகிய வேதத்தையும், கலைகளையும் ஓதாதே தன்னியலாலேயே திருவருள் துணைகொண்டு உணர்ந்த தமிழ் விரகன். உன்னிய எண்ணிச் சொன்ன. உயர்பொருள் - வீடு.