பக்கம் எண் :

1148திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1339. கலைமக டலைமக னிவனென வருபவர்
அலைமலி தருபுன லரவொடு நகுதலை
இலைமலி யிதழியு மிசைதரு சடையினர்
நிலைமலி மிழலையை நினையவ லவரே. 3

1340. மாடமர் சனமகிழ் தருமன முடையவர்
காடமர் கழுதுக ளவைமுழ வொடுமிசை
பாடலி னவில்பவர் மிகுதரு முலகினில்
நீடமர் மிழலையை நினையவ லவரே. 4

_________________________________________________

மிழலையை நினைய வல்லவர்களே இவ்வுலகத்து அழகான உருவுடையவர்கள் என்கின்றது. எழில் - அழகு. கரு மலிதரு மிகு புவி - பிறவி மிக்க இப்பூமி. இருள் - ஆணவம். நிருபமன் - உவமம் இல்லாதவர். ஒப்பிலி என்பதாம்.

3. பொ-ரை: அலைகள் நிறைந்த கங்கை நதி, பாம்பு, தலையோடு, வில்வ இலை, மிக்க கொன்றை ஆகியன பொருந்திய சடை முடியினனாகிய சிவபிரான் உறையும் நிலைபேறு உடைய திருவீழிமிழலையை நினைய வல்லவர் கலைமகளின் தலைவன் இவன் என்னும் ஒவ்வொருவரும் சொல்லத்தக்க தகுதியை உடையவராய்க் கல்வி நலம் வாய்க்கப் பெறுவர்.

கு-ரை: மிழலையை நினைவார் கலைமகள் கணவனாவார் என்கின்றது. நகுதலை - கபாலம். இலைமலி இதழி - இலைகளோடு நிறைந்த கொன்றை. இலை - இதழுமாம்; நிலை - நிலைபேறு; அழியாமை.

4. பொ-ரை: இடுகாட்டில் வாழும் பேய்கள் ஒலிக்க முழவு முதலிய கருவிகள் ஒலிக்க இசைபாடி நடம் நவில்பவனாகிய சிவபிரான் இனிதாக எழுந்தருளியதும் இவ்வுலகிடைப் பெருமையோடு நீண்ட காலமாக விளங்குவதுமாகிய திருவீழிமிழலையை நினைய வல்லவர்கள் அருகில் விரும்பி உறையும் சுற்றத்தினர் மகிழும் மனம் உடையவராவர்.

கு-ரை: பேயோடாடும் பெம்மான், இவ்வுலகில் இனிதமரும் மிழலையை நினைபவர் சுற்றம் மகிழ இருப்பர் என்கின்றது. மாடு - பக்கம். மாடமர்சனம் - சுற்றம். காடு - சுடுகாடு. கழுது - பேய்.