பக்கம் எண் :

1156திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1354. வடிவுடை மலைமகள் சலமக ளுடனமர்
பொடிபடு முழையதள் பொலிதிரு வுருவினன்
செடிபடு பலிதிரி சிவனுறை சிவபுரம்
அடைதரு மடியவ ரருவினை யிலரே. 7

1355. கரமிரு பதுமுடி யொருபது முடையவன்
உரநெரி தரவரை யடர்வுசெய் தவனுறை
பரனென வடியவர் பணிதரு சிவபுர
நகரது புகுதனம் முயர்கதி யதுவே. 8

1356. அன்றிய லுருவுகொ ளரியய னெனுமவர்
சென்றள விடலரி யவனுறை சிவபுரம்

__________________________________________________

7. பொ-ரை: அழகிய வடிவினைக் கொண்ட மலைமகள் நீர்மகளாகிய கங்கை ஆகியோருடன் புள்ளி பொருந்திய மானினது தோல் விளங்கும் அழகிய உருவத்தைக் கொண்டவனும், தீ நாற்றம் வீசும் மண்டையோட்டில் பிச்சையை ஏற்றுத் திரிபவனுமாகிய சிவபிரான் உறையும் சிவபுரத்தை அடையும் அடியவர் நீங்குதற்கரிய வினைகள் இலராவர்

கு-ரை: மலைமகளும் அலைமகளும் உடனுறையும் உருவுடையன்; பலிக்குத்திரிபவன் உறைபதி சிவபுரம்; அதனையடைபவர் வினையிலராவர் என்கின்றது. சலமகள் - கங்கை. உழை அதள் - மான் தோல். செடி படு பலி - முடைநாற்றம் கமழும் பிச்சை. செடி - ஆகுபெயராய்த் தலைஓட்டைக் குறித்தது.

8. பொ-ரை: இருபது கைகளையும், பத்துத் தலைகளையும் உடையவனாகிய இராவணனின் மார்பு நெரியுமாறு கயிலை மலையால் அடர்த்தருளிய சிவபிரான் உறைவதும், மேலான பரம் பொருள் இவனேயாவான் என அடியவர் வழிபாடு செய்வதும் ஆகிய சிவபுரத்தை அடைதல் நமக்கு உயர் கதியைத் தரும்.

கு-ரை: சிவபுரம் புகுதலே நமக்கு உயர்கதியாம் என்கின்றது. உரம் - மார்பு. அடர்வு - நெருக்குதல். சிவபுரநகர்அது புகுதல் நம் உயர்கதியதுவே எனப்பிரிக்க.

9. பொ-ரை: தங்கள் செயலுக்கு மாறுபட்ட தன்மையொடு கூடிய பன்றி அன்னம் ஆகிய வடிவங்களைக் கொண்ட திருமால் பிரமன் ஆகி