பக்கம் எண் :

 126. திருக்கழுமலம்1159


126. திருக்கழுமலம்

பதிக வரலாறு:

(117 - ஆம் பதிகம் பார்க்க)

திருத்தாளச்சதி
பண்: வியாழக்குறிஞ்சி

பதிக எண்: 126

திருச்சிற்றம்பலம்

1359. பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின்ற வும்பரப்

பாலேசேர்வா யேனோர்கான் பயில்கண முநிவர்களுஞ்

சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின்மங்கை தன்னொடுஞ்

சேர்வார்நாணா ணீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாஞ்

சந்தித்தே யிந்தப்பார் சனங்கணின்று தங்கணாற்

றாமேகாணா வாழ்வாரத் தகவுசெய்த வனதிடங்

கந்தத்தா லெண்டிக்குங் கமழ்ந்திலங்கு சந்தனக்

காடார்பூவார் சீர்மேவுங் கழுமல வளநகரே. 1

___________________________________________

1. பொ-ரை: வினைவயத்தால் மண்ணுலகம் வந்து எல்லா இடங்களிலும் பொருந்தி அவ்விடங்களே தமக்கு இருப்பிடமாய் வாழும் தேவர்களும், மற்றவர்களாகிய கானகங்களில் வாழும் முனிவர்களும், மனத்தால் சிந்தித்து வழிபட்டு உய்தி பெறுமாறு, மலையரையன் மகளாகிய பார்வதி தேவியாரோடு சேர்ந்தவராய், நாளும் நாளும் நீண்டுயர்ந்த கயிலைமலையில் விளங்கும் திருவோலக்கச் சிறப்புக்கள் எல்லாவற்றையும் இந்த உலகில் வாழும் மக்கள் தங்கள் கண்களால் தாமே கண்டு வாழ்பவராகப் பெருங்கருணையோடு காட்சி நல்குபவனது இடம் எட்டுத் திசைகளிலும் மணம் கமழ்ந்து விளங்கும் மலர்களோடு கூடிய சந்தன மரக்காடுகள் சிறந்து வளர்ந்து செழிக்கும் கழுமல நகராகும்.

கு-ரை: தேவர்களும் முநிவர்களும் தியானிக்க உமையோடு பொருந்தி, கைலையில் எழுந்தருளியிருக்கின்ற காட்சியை இந்த மண்ணுலகத்தவர்களும் தம் கண்ணாலே கண்டு வாழ அருளியவனது இடம் கழுமலவளநகர் என்கின்றது. பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர் என்றது ஆணவமலக் கட்டினால் வந்து எவ்விடத்தும்