பக்கம் எண் :

1160திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1360. பிச்சைக்கே யிச்சித்துப் பிசைந்தணிந்தவெண்பொடிப்

பீடார்நீடார் மாடாரும் பிறைநுத லரிவையொடும்

உச்சத்தா னச்சிப்போ றொடர்ந்தடர்ந்த வெங்கணே

றூராவூரா நீள்வீதிப் பயில்வொடு மொலிசெயிசை

வச்சத்தா னச்சுச்சேர் வடங்கொள்கொங்கை மங்கைமார்

வாராநேரே மாலாகும் வசிவல வவனதிடங்

கச்சத்தான் மெச்சிப்பூக் கலந்திலங்கு வண்டினங்

காரார்காரார் நீள்சோலைக் கழுமல வளநகரே. 2

__________________________________________________

உறைகின்ற தேவர்கள் வினையால் பந்திக்கப்பெற்ற இந்திரன் பிரமன் முதலியோர் கழுமலம் வந்து பூசித்தமைபோல்வன. அப்பாலே சேர்வாய் ஏனோர் - அப்பாலும் அடிசேர்ந்தார்களாய சிவஞானிகள். புறம்பான நெறிகளிற் சேர்ந்த பிறர் என்றுமாம். கான் பயில் கணமுனிவர்கள் - காட்டுறை வாழ்க்கையையுடைய கூட்டமான முனிவர்கள். சிலம்பு - மலை. ஈண்டு இமயம். நாள்நாள் நீள் கயிலைத் திகழ்தரு பரிசது எலாம் - நாள்தோறும் திருக்கயிலையில் வீற்றிருக்கும் திருவோலக்கச் சிறப்பெல்லாவற்றையும். பார் - பூமி. தாமே காணா - தாங்களே கண்டு; என்றது அவ்வளவு எளிமை காட்டி நின்றது. கந்தம் - மணம்.

2. பொ-ரை: பிச்சை ஏற்பதை விரும்பி நீரில் குழைத்தணிந்த வெண்பொடியினராய்ப் பெருமை பொருந்தியவரும் புகழால் விரிந்தவருமாய், அருகில் விளங்கும் பிறை போன்ற நெற்றியினளாகிய உமையம்மையோடு உச்சிப்போதினை விரும்பித் தன்னை எதிர்ப்பவரைத் தொடர்ந்து கொல்லும் தறுகண்மையை உடையவிடையேற்றின் மீதமர்ந்து, ஊர்ந்து ஊர்ந்து நீண்ட தெருக்களில் விருப்பத்தோடு பாடுவதால், நச்சுதலுக்குரியனவும் முத்துவடங்கள் அணிந்தனவுமாகிய கொங்கைகளை உடைய மகளிர் அவ்விசையைக் கேட்டு வந்து தமக்கு முன்னே விரக மயக்கம் கொள்ளுமாறு வசீகரிக்கும் வன்மை பொருந்திய சிவபிரானது இடம். மேலைக் காற்றினால் அல்லது ஒற்றுமையோடு பூக்களைக் கலந்து விளங்கும் வண்டினங்களோடு கருமை நிறம் பொருந்திய மேகங்கள் தவழும் நீண்ட சோலைகளை உடைய கழுமல வளநகராகும்.

கு-ரை: பிச்சையை விரும்பி, நீரிற்குழைத்த நீற்றையணிந்து. உமாதேவியோடும் உச்சிப்போதில் விடையேறி வீதியில் பாடிச் செல்லும் தமது இசையைக் கேட்ட மகளிர் மால் கொள்ளச் செய்பவ