1366. செம்பைச்சே ரிஞ்சிச்சூழ்
செறிந்திலங்கு பைம்பொழிற்
சேரேவாரா வாரீசத் திரையெறி நகரிறைவன்
இம்பர்க்கே தஞ்செய்திட் டிருந்தரன்
பயின்றவெற்
பேரார்பூநே ரோர்பாதத் தெழில்விர
லவணிறுவிட்
டம்பொற்பூண் வென்றித்தோ ளழிந்துவந்த
னஞ்செய்தாற்
காரார்கூர்வாள் வாணாளன் றருள்புரி பவனதிடங்
கம்பத்தார் தும்பித்திண் கவுட்சொரிந்த
மும்மதக்
காரார்சேறார் மாவீதிக் கழுமல
வளநகரே. 8
_________________________________________________
பரந்த ஐம்புலன்கள் வாய்ப்பாலே
போகாமேகாவா - எங்கும் பரவியுள்ள சுவை முதலாகிய
ஐம்புலன்களிடம் சென்று பற்றாதபடி காத்து, பகை அறும்வகை
நினையா - காமமாதிய உட்பகை ஆறையும் நீங்கும்வகை
நினைத்து. முத்திக்கே விக்கத்தே முடிக்கும் முக்குணங்கள்
வாய்மூடாவூடா - முத்திக்கு இடையூறாக முடிக்கும் முக்குணங்களின்
வழியை மூடிப் பிணங்கி. நால் அந்தக்கரணமும் ஒரு நெறியாய்ச்
சித்திக்கே உய்த்திட்டு - மனம் புத்தி சித்தம்
அகங்காரம் என்னும் அந்தக் கரணங்கள் நான்கையும்
ஒருநெறிப்படுத்திச் சிந்தனையில் செலுத்தி. திகழ்ந்த
மெய்ப்பொருள் சேர்வார்- விளங்கிய சிவபரம்
பொருளைத் தியானிப்பவர்கள். தாமே தானாகச் செயுமவன்
- அவர்களனைவரையும் சிவமாகச் செய்யும் இறைவன்.
சட்டங்கம் கத்திட்டோர் கலந்திலங்கும் காலே
ஓவாதார் - ஆறு வேதாங்கங்களையும் ஓதியுணர்ந்தோர்கள்
ஒன்றி விளங்கும் சிவமாய நற்பொருளின் திருவடியை
இடைவிடாது தியானிப்பவர்கள்.
8. பொ-ரை: செம்பினால் இயன்ற மதில்களால்
சூழப்பெற்றுச் செறிந்து விளங்குவதும், பசுமையான
பொழில்கள் சேர்ந்ததும், நீண்ட கடல்களின்
அலைகளால் மோதப் பெறுவதுமாகிய இலங்காபுரி
நகருக்கு இறைவனாகிய இராவணன், இவ்வுலக மக்கட்குத்
துன்பங்கள் செய்து வாழ்ந்ததோடு சிவபிரான்
உறையும் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்டபோது
அழகிய மலர்போன்ற ஓர்திருவடி விரல் ஒன்றை ஊன்றி
அழகிய பொன்னணிகலன்கள் பூண்ட அவனது வெற்றி நிறைந்த
தோள் வலிமையை அழித்து அவன் பிழை உணர்ந்து வந்தனம்
செய்த அளவில் அவனுக்கு அரிய கூரிய வாளையும் நீண்ட
வாழ்நாளையும் அப்பொழுதே அருள் புரிந்தருளிய
சிவபெருமானது இடம்; கம்பங்களில் கட்டிய யானைகளின்
வலி கன்னங்கள் முதலியன பொழிந்த மும்மதங்களால்
நிலம் கரிய சேறாகும் வீதிகளை உடைய கழுமலநகராகும்.
|