1368. தட்டிட்டே முட்டிக்கைத் தடுக்கிடுக்கி
நின்றுணாத்
தாமேபேணா தேநாளுஞ் சமணொடு உழல்பவரும்
இட்டத்தா லத்தந்தா னிதன்றதென்று
நின்றவர்க்
கேயாமேவா யேதுச்சொல் லிலைமலி மருதம்பூப்
புட்டத்தே யட்டிட்டுப் புதைக்குமெய்க்கொள்
புத்தரும்
போல்வார்தாமோ ராமேபோய்ப்
புணர்வுசெய் தவனதிடங்
கட்டிக்கால் வெட்டித்தீங் கரும்புதந்த
பைம்புனற்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே. 10
_________________________________________________
கு-ரை: திருமால் பன்றியுருவெடுத்துப்
பூமியைத் தோண்டியும், பங்கயத்தவன் அன்னமாய்ப்
பறந்தும் அடிமுடி தேடியும் அறியாதே வணங்க, அக்கினிப்பிழம்பாகிய
வேறோர் வடிவம் காட்டிய இறைவனிடம் கழுமலம் என்கின்றது.
மால் தான் பன்றிக்கோலம் கொண்டு, இப் படித்தடம்
பயின்று இடப்பான் ஆம் அம்புசேர் உயர்ந்த பங்கயத்தவனோ
தான் மேய பறவையின் உருவுகொள ஒன்றிட்டு உருவினது
அடிமுடியும் அஃது உணராது சென்றிட்டே வந்திப்ப, திருக்களம்கொள்
பைங்கண் நின்று ஏசால், வேறு ஓர்ஆகாரம் தெரிவு செய்தவனிடம்
எனப் பிரித்துக் கூட்டிப் பொருள்கொள்க. படித்தடம்
- பூமி. இடப்பானாம் - தோண்டுவானாம். மால் - திருமால்.
தான்மேய பறவை - தான் ஊர்தியாக விரும்பிய பறவை.
அம்பு - நீர். தான் ஓதான் - தான் வேதங்களை ஓதியவனாக
இருந்தும் அடிமுடியும் உணராது எனக் கூட்டுக. ஏசால் - வல்லமையால்.
ஆகாரம் - வடிவம.் முன்றிற்கே கன்றுக்கே கலந்து இல்லம்
நிறைக்கவும் - முன்றிலில் கன்று கலந்து வீட்டை
வளத்தால் நிறைக்கவும், காலே வாரா மேலே பாய் -
வாய்க்கால் வந்து மேலேறிப் பாயும் கழுமலம் என்க.
10. பொ-ரை: தட்டைக் கையில் ஏந்தி
வளைந்த கையில் தடுக்கை இடுக்கி நின்று உண்டு ஆடைகளால்
தம்மைப் பேணாது நாள்தோறும் வருந்தித் திரியும்
சமணர்களும், தம் விருப்பப்படி கேட்பவர்க்குத் தெளிவு
ஏற்படாதவாறு பொருள் இது அன்று அதுதான் என்று
வாய்க்கு வந்தபடி காரணம் கூறுபவரும், இலைகள்
நெருங்கிய மருதமரத்தின் பூவை அரைத்துப்
பின்புறத்தே, பூசிச் சாயமூட்டிய ஆடையைத் தம் உடலின்
பின்பாகத்தே சுற்றிக்கொண்டு உடலை மறைப்போரும்
ஆகிய புத்தர்களும் போல்பவர் கண்டறியாதவாறு சென்று
எழுந்தருளியுள்ள சிவபிரானது இடம் வெல்லக்கட்டிகளைத்
தரும் இனிய கரும்பை வெட்டியதால் அக்கரும்பு தந்த
இனிய சாறு வாய்க்கால் வழியே வந்து மேல் ஏறிப்
பாயும் வளமுடைய கழுமல வளநகராகும்.
|