பக்கம் எண் :

 127. திருப்பிரமபுரம்1169


1369. கஞ்சத்தே னுண்டிட்டே களித்துவண்டு சண்பகக்

கானேதேனே போராருங் கழுமல நகரிறையைத்

தஞ்சைச்சார் சண்பைக்கோன் சமைத்தநற் கலைத்துறை

தாமேபோல்வார் தேனேரார் தமிழ்விர கனமொழிகள்

எஞ்சத்தேய் வின்றிக்கே யிமைத்திசைத்த மைத்தகொண்

டேழேயேழே நாலேமூன் றியலிசை யிசையியல்பா

வஞ்சத்தேய் வின்றிக்கே மனங்கொளப் பயிற்றுவோர்

மார்பேசேர்வாள் வானோர்சீர் மதிநுதன் மடவரலே. 11

திருச்சிற்றம்பலம்

_________________________________________________

கு-ரை: சமணரும் புத்தரும் போல்வார் தம்மை அறியா வண்ணம் மறைப்பித்த இறைவனிடம்இது என்கின்றது. தட்டு இட்டே, முட்டிக்கை தடுக்கு இடுக்கி நின்று உணா தாமே பேணாதே நாளும் சமணொடும் உழல்பவரும் - மண்டையை ஏந்தி கைமுட்டியில் தடுக்கை இடுக்கிக்கொண்டு, நின்றுகொண்டு உண்டு, தாம் ஒன்றையும் பேணாதவர்கள்போல நாளும் சமண் கொள்கையோடு சுற்றுபவர்களும், இட்டத்தால் அத்தம் தான் இது அன்று அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏது சொல் - விருப்பப்படி பொருள் இது அன்று அதுதான் என்று கேட்பவர்க்குப் பொருந்தாமல் வாயில் வந்தபடி காரணம் சொல்லும் (புத்தர்). இலை மலி மருதம்பூப் புட்டத்தே அட்டு இட்டு புதைக்கும் மெய் கொள் புத்தர் - மருதமரப் பூவை அரைத்து பின்பக்கத்துப் பூசி உடலை மறைக்கும் புத்தர்கள். ஓராமே - ஆராயாமல். புணர்வு - சூழ்ச்சி. கால் வெட்டி கட்டித் தீங்கரும்பு தந்தபைம்புனல் காலேவாரா மேலேயாய் - அடியை வெட்டிக் கட்டி இனிய கரும்புகள் தந்த சுவைநீர் கால்வழி வந்து மேலேறிப்பாயும் நகர்என்க.

11. பொ-ரை: தாமரை மலரிலுள்ள தேனைக் குடித்துக் களித்த வண்டுகள் சண்பக மரச்சோலைகளில் உள்ள தேன் வண்டுகளோடு போரிடும் கழுமல வளநகர் இறைவனைத் தஞ்சமாகச் சார்ந்துள்ள சண்பை நகர்த் தலைவனும் தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் குறைவின்றிப் பாடியமைத்த தேனுக்கு நிகரான இப்பதிகப் பாடல்களை நல்ல கலைகளில் துறைபோய்த் தமக்குத் தாமே நிகராய் இருபத்தொரு பண்முறையினால் இயல்பாக வஞ்சனையின்றி மனம் பொருந்தப் பாடுபவர்களின் மார்பினில் தேவர்களால் போற்றப் பெறும் சிறப்புமிக்க பிறை போன்ற நெற்றியினை உடைய திருமகள் சேர்வாள்.