பக்கம் எண் :

 128. திருப்பிரமபுரம்1179


ஓரா னீழ லொண்கழ லிரண்டும்
முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி
காட்டினை நாட்ட மூன்றாகக் கோட்டினை
இருநதி யரவமோ டொருமதி சூடினை
ஒருதா ளீரயின் மூவிலைச் சூலம் 10
நாற்கான் மான்மறி யைந்தலை யரவம்
ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத்
திருகோட் டொருகரி யீடழித் துரித்தனை

__________________________________________________

விஷ்ணுவையும் வலத்தினும் இடத்தினும் அடக்கிக் கொண்டு ஏகமாய்த் திரிமூர்த்தியாகி நின்றனை எ-று.

ஓரால்நீழலொண்கழல் இரண்டும் முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளி நெறிகாட்டினை - என்றது. விருக்ஷங்களுக்கு எல்லாந் தலைமையாய் இருப்பதொரு வடவிருக்ஷத்தின் நீழலிலே எழுந்தருளியிருந்து நின்னழகிய ஸ்ரீ பாதங்களை உதயம் மத்தியானம் அத்தமனம் என்கின்ற மூன்றுகாலமும் தோத்திரம் செய்யாநின்ற அகஸ்தியன் புலத்தியன் சனகன் சனற் குமாரன் என்னும் நால்வகை இருடிகளுக்கும் தற்சுருபமான திருமேனியைக் காட்டி அருளினை எ-று.

நாட்டம் மூன்றாகக் கோட்டினை - என்றது. பிர்மா முதலாயிருந்துள்ள ஆத்மாக்கள் ரூபமென்னும் புலனாலே சர்வ பதார்த்தங்களையும் காணாதபடியாலே சந்திராதித்தர்களையும் அக்கினியையும் மூன்று கண்ணாகக் கொண்டருளி அந்தகாரமான இருளை ஓட்டினை எ-று.

இருநதி அரவமோடு ஒரு மதி சூடினை - என்றது. பெரிதாகிய கங்கையையும் ஒப்பில்லாத பாம்பினையும் ஒருகாலத்தினும் முதிராத பிறைக்கண்ணியையும் சூடியருளினை எ-று.

ஒருதாள் ஈரயின் மூவிலைச்சூலம் நாற்கான் மான்மறி ஐந்தலை அரவம் ஏந்தினை - என்றது. பிரணவமாயிருந்துள்ள ஒரு காம்பினையும், ஈருகின்ற கூர்மையினையும், பிர்மா விஷ்ணுருத்திரனென்கின்ற மூன்று இலையினையும் உடையதொரு சூலத்தினையும், இருக்கு - யசுர் - சாமம் - அதர்வணம் என்கின்ற நாலு வேதங்களையும் நாலுகாலாயிருந்துள்ள ஒரு மான் கன்றினையும், ஸ்ரீ பஞ்சாக்ஷரங்களையும், அஞ்சு தலையாகவுடையதொரு மகாநாகத்தினையும் அஸ்தங்களிலே தரித்தருளினை எ-று.