வரபுர மொன்றுணர் சிரபுரத் துறைந்தனை
ஒருமலை யெடுத்த விருதிற லரக்கன்
விறல்கெடுத் தருளினை புறவம்
புரிந்தனை
_________________________________________________
வேண்டினார் வேண்டியது கொடுத்துத்
தொலைவறச் சங்கநிதி பத்மநிதி என்று
சொல்லப்பட்ட இரண்டு நிதிகளும் பூவும் தராயும்
பூசிக்கையாலே திருப்பூந்தரா யென்னப்பட்ட
திருப்பதியிலே எழுந்தருளியிருந்தனை எ-று.
ஒருகாலத்துத் தொலையாத வரத்தைப் பெறுவது
காரணமாகத் திருத்தோணிபுரத்திலே வந்து
தம்பிரானைப் பூசித்தளவில் ‘உங்களுக்கு
வேண்டுவதென்‘ என்று கேட்டருள, ‘தம்பிரானே!
அடியோங்களுக்கு எல்லாக் காலங்களுந்தொலையாமல்
கொடுக்கத்தக்க வரத்தைப் பிரசாதித்தருள
வேண்டும்‘ என்று விண்ணப்பஞ்செய்ய, அவ்வாறே
தொலையாதவரத்தையும் கொடுத்தருளி
மகாசங்காரத்தினுந் தம்முடைய ஸ்ரீ அஸ்தங்களிலே
தரித்தருளும் வரப்பிரசாதமுங் கொடுத்தருளினதால்
பூந்தராய் எனப் பெயருண் டாயது.
வரபுரமொன்றுணர் சிரபுரத்துறைந்தனை -
என்றது. வரத்தைத் தருவதான புரமென்றுணரத்தக்க
சிரபுரமென்பதே திருப்பதியாக எழுந்தருளியிருந்தனை
எ-று. தேவர்களும் பிர்ம விஷ்ணுக்களுமாகக்கூடி
அமிர்தத்தை யுண்டாக்கித் தேவர்களை இருத்தி
விஷ்ணு பகவான் அமிர்தம் படைத்துக்கொண்டு வருகிற
வேளையில் ராகு கேது என்கிற இரண்டு பாம்புங்கூடிக்
கரந்திருந்து அமிர்தபானம் பண்ணுவதாக
இருப்பதுகண்டு விஷ்ணுபகவான் அமிர்தம்
படைத்துவருகின்ற சட்டுவத்தைக் கொண்டு தலையற
வெட்டுகையால் உடலிழந்து நாகமிரண்டும் நம்முடல்
தரக்கடவான் பரமேசுவர னொழிய வேறேயில்லை என்று
திருப்பூந்தராயிலேவந்து பரமேசுவரனை நோக்கி
இரண்டு சிரங்களும் பூசித்ததால் சிரபுரம் என்று
பெயருண்டாயது.
ஒருமலை எடுத்த இருதிறலரக்கன்
விறல்கெடுத்தருளினை - என்றது. பெருமையுள்ள
கயிலாயம் என்னும் பேரையுடைத்தாய் உனக்கே
ஆலயமாயிருப்பதொரு வெள்ளிமலையை எடுத்த பெரிய
புசபலங்கொண்ட இராவணனுடைய கர்வத்தைக்
கெடுத்தருளினை எ-று.
புறவம் புரிந்தனை - என்றது. பிரசாபதி
என்கின்ற பிர்மரிஷி கௌதமரிஷியை நோக்கி நீ
ஸ்திரீபோகத்தைக் கைவிடாமலிருக்கிறவ னல்லவோ
என்று தூஷணிக்கையாலே கவுதமரிஷியும் பிரசாபதி
பகவானைப் பார்த்து "நீ புறா என்னும் ஒரு
பக்ஷியாய் நரமாமிசம் புசிப்பாயாக" என்று
சபிக்கப் பிரசாபதியும் ஒரு புறாவாய்ப் போய்ப்
|