எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை
ஆறு பதமு மைந்தமர் கல்வியும்
மறைமுத னான்கும் 40
மூன்று காலமுந் தோன்ற நின்றனை
எச்சன் ஏழிசையோன் கொச்சையை மெச்சினை - என்றது. குரல் - துத்தம் - கைக்கிளை -
உழை - இளி - விளரி - தாரம் என்பது ஏழிசை - குரலாவது -
சங்கத்தொனி, துத்தமாவது - ஆண்மீன்பிளிறு,
கைக்கிளையாவது - குதிரையின்குரல். உழையாவது -
மானின்குரல், இளியாவது - மயிலின்குரல்,
விளரியாவது - கடலோசை, தாரமாவது - காடையின்குரல்
என்னும் நாதங்களையும் மெச்சினை, மகத்தான
இருடிகள் எல்லாரினும் விருத்தராயுள்ள பராசரப்
பிரமரிஷியானவர் மற்ற ரிஷிகளெல்லாரையும்
நோக்கி நீங்கள் சமுசாரிகளொழிய விரதத்தை
அனுஷ்டிப்பாரில்லையென்று அவர்களைத் தூஷிக்க
அவர்களும் "நீ மச்சகந்தியைப் புணர்ந்து
மச்சகந்தமும் உன்னைப்பற்றி, விடாமல்
அனுபவிப்பா"யென்று சபிக்கையாலே அந்தச்
சாபத்தின்படி போய் மச்சகந்தியைப் புணர்ந்து
அந்தத் துர்க்கந்தம் இவரைப் பற்றி ஒரு யோசனை
தூரம் துர்க்கந்தித்தபடியாலே இது போக்கவல்லார்
பரமேசுவரனையொழிய இல்லை என்று சீகாழியிலே வந்து
பரமேசுவரனை அர்ச்சிக்கப் பரமேசுவரன் "உனக்கு
வேண்டியது என்ன என்று கேட்க" ‘தம்பிரானே!
அடியேனைப் பற்றின துர்க்கந்தத்தை விடுவிக்க
வேண்டும்‘ என்று விண்ணப்பஞ்செய்ய, தம்பிரானும்
‘இவனென்ன கொச்சை முனியோ‘ என்று திருவுளமாய்
இவன்மேற் பற்றின துர்க்கந்தத்தையும்
போக்கிச் சுகந்தத்தையும் பிரசாதித்தருளிக்
கொச்சை என்கின்ற சந்தான நாமத்தையுந்
தரித்தருளிக் கொச்சை என்கின்றதே
திருப்பதியாக எழுந்தருளி யிருந்தனை எ-று.
ஆறு பதமும் ஐந்தமர் கல்வியும்
மறைமுதல் நான்கும் மூன்றுகாலமும் தோன்ற நின்றனை -
என்றது. பிரத்தி - பிரத்தியாகாரம் - துல்லியம் -
துல்லியாதீதம் - வித்தை - அவித்தை என்கின்ற
ஆறுபதங்களும், ஆசு - மதுரம் - சித்திரம் -
வித்தாரம் - விரையம் என்கின்ற ஐந்தும், இருக்கு -
யசுர் - சாமம் - அதர்வணம் என்கின்ற
நாலுவேதங்களும், செல்காலம் - வருங்காலம் -
நிகழ்காலம் என்கின்ற மூன்றுகாலமும்
தோன்றாநின்ற திரிமூர்த்தியாயினை எ-று.
இருமையின் ஒருமையின் - என்றது.
சத்திசிவங்களாயிருந்துள்ள இரண்டும் ஒன்றாய்
அர்த்தநாரீசுவரவடிவமாய் இருந்துள்ளதை எ-று.
|