பூந்தராயில் எழுந்தருளினாய்,
வரந்தருவதான சிரபுரத்தில் உறைந்தாய்,
ஒப்பற்ற கயிலை மலையைப் பெயர்த்த
பெருந்திறல் படைத்த இராவணனின் வலிமையை
அழித்தாய். புறவம் என்னும் தலத்தை விரும்பினாய்,
கடலிடைத் துயிலும் திருமால் நான்முகன் ஆகியோர்
அறிய முடியாத பண்பினை உடையாய். சண்பையை
விரும்பினாய். ஐயுறும் சமணரும் அறுவகையான
பிரிவுகளை உடைய புத்தரும் ஊழிக்காலம் வரை உணராது
வாழ்நாளைப் பாழ் போக்கக் காழிப்பதியில்
எழுந்தருளியுள்ளாய்.
வேள்வி செய்வோனாகிய ஏழிசையோன்
வழிபட்ட கொச்சை வயத்தை விரும்பி
வாழ்கின்றாய்,
ஆறு பதங்கள், ஐந்து வகைக் கல்வி, நால்
வேதம், மூன்று, காலம், ஆகியன தோன்ற நிற்கும்
மூர்த்தியாயினாய்,
சத்தி சிவம் ஆகிய இரண்டும்
ஓருருவமாய் விளங்கும் தன்மையையும் இவ்விரண்டு
நிலையில் சிவமாய் ஒன்றாய் இலங்கும்
தன்மையையும் உணர்ந்த குற்றமற்ற அந்தணாளர்
வாழும் கழுமலம் என்னும் பழம்பதியில் தோன்றிய
கவுணியன்குடித் தோன்றலாகிய ஞானசம்பந்தன்
கட்டுரையை விரும்பிப் பிரமன் மண்டையோட்டில்
உண்ணும் பெருமானே அறிவான். அத்தன்மையை உடைய
நின்னை உள்ளவாறு அறிவார், நீண்ட இவ்வுலகிடை
இனிப் பிறத்தல் இலர்.
குருவருள்: ஞானசம்பந்தர் அருளிய
சித்திரக் கவிகளுள் ஒன்றாகிய
திருவெழுகூற்றிருக்கை ஒன்றை மட்டுமே பாராயணம்
புரிவோர், அவர் அருளிய தேவாரத்
திருப்பதிகங்கள் அனைத்தையும் ஓதிய பயனைப்
பெறுவர் என்பது மரபு.
சிவபாத இருதயர், திருஞானசம்பந்தர்
ஓதிவரும் திருப்பதிகங்களை நாள்தோறும்
பாராயணம் செய்வதை நியமமாகக் கொண்டிருந்தார்.
பதிகம் பெருகப் பெருகப் பாராயணம் செய்வதில்
தம் தந்தையார் இடர்ப்படுதலைக் கண்ட
திருஞானசம்பந்தர் இத்திருவெழுகூற்றிருக்கையை
அருளி இதனை ஓதி வந்தாலே அனைத்துத்
திருப்பதிகங்களையும் ஓதிய பயனைப் பெறலாம் எனக்
கூறினார் என்பர்.
|