பாமருவுங் கலைப்புலவோர்
பன்மலர்கள்
கொண்டணிந்து பரிசினாலே
காமனைகள் பூரித்துக் களிகூர்ந்து
நின்றேத்துங் கழுமலமே. 9
1392. குணமின்றிப் புத்தர்களும்
பொய்த்தவத்தை
மெய்த்தவமாய் நின்றுகையில்
உணன்மருவுஞ் சமணர்களு முணராத
வகைநின்றா னுறையுங்கோயில்
மணமருவும் வதுவையொலி விழவினொலி
யிவையிசைய மண்மேற்றேவர்
கணமருவு மறையினொலி கீழ்ப்படுக்க
மேற்படுக்குங் கழுமலமே. 10
_________________________________________________
தேடப் புகுந்து தம்மால் ஆமளவும் சென்று
அடிமுடி காணாதவராய்த் தோற்று நிற்க, அழலுருவாய்
ஓங்கி நின்ற சிவபிரான் எழுந்தருளிய
கோயிலையுடையது. பல்வகைப் பாக்களில் அமைந்துள்ள
அருங்கலைகளை அறிந்த புலவர்கள் பல மலர்களைக்
கொண்டு அருச்சித்து முறையோடு விருப்பங்கள்
நிறைவேறக்கண்டு களிகூர்ந்து போற்றும் கழுமல
நகராகும்.
கு-ரை: பிரமனும் திருமாலும்
அன்னமாயும், பன்றியாயும் அடிமுடிகாணப் பெறாதான்
அமருங் கோயில் புலவர்கள் பூக்கொண்டு அணிந்து
இஷ்டத்தை நிறைவேற்ற வழிபாடு செய்யும் கழுமலம்
என்கின்றது. பூ மகள் தன் கோன் - இலக்குமி
நாயகனாகிய திருமால். புள் - பறவையாகிய அன்னம்.
கேழல் - பன்றி. ஆம் அளவும் - ஆணவத்தால் விளைந்த
தற்போதம் கெடுமளவும். காமனை - விருப்பம்.
10. பொ-ரை: நற்குணங்கள் இல்லாத
புத்தர்களும், பொய்த்தவத்தை மெய்த்தவமாய்
எண்ணிக் கையில் உணவேற்று உண்டு வாழும்
சமணர்களும், அறிய முடியாதவாறு நின்ற சிவபிரான்
உறையும் கோயிலை உடையது, ஆடவர் பெண்டிரை மணக்கும்
திருமணத்தில் எழும் ஆரவாரமும், திருவிழாக்களின்
ஓசையும், பூசுரர்களாகிய அந்தணர்கள் ஓதும் வேத
ஒலியை அடங்குமாறு செய்து மிகுந்து ஒலிக்கும் கழுமல
நகராகும்.
|