பக்கம் எண் :

 130. திருவையாறு1201


மான்பாய வயலருகே மரமேறி

மந்திபாய் மடுக்கள்தோறும்

தேன்பாய மீன்பாயச் செழுங்கமல

மொட்டலருந் திருவையாறே. 4

1398. நீரோடு கூவிளமு நிலாமதியும்

வெள்ளெருக்கு நிறைந்தகொன்றைத்

தாரோடு தண்கரந்தை சடைக்கணிந்த

தத்துவனார் தங்குங்கோயில்

காரோடி விசும்பளந்து கடிநாறும்

பொழிலணைந்த கமழ்தார்வீதித்

தேரோடு மரங்கேறிச் சேயிழையார்

நடம்பயிலுந் திருவையாறே. 5

_________________________________________________

மரங்களில் ஏறி மந்திகள் பாய்வதால் மடுக்களில் தேன் பாய, அதனால் மீன்கள் துள்ளவும் செழுமையான தாமரை மொட்டுக்கள் அலரவும், விளங்குவதாகிய திருவையாறாகும்.

கு-ரை: பிரமகபாலத்தை ஏந்தி ஊர்தோறும் பலிக்கு உழல்வாராகிய தழல் உருவர் தங்கும் கோயில், மான்பாய, வயலருகேயுள்ள மரத்தில் ஏறி மந்திகள் மடுக்கள் தோறும் பாய்வதால் தேன் பாய, மீன் பாய, தாமரைகள் மலரும் ஐயாறு என்கின்றது. மான்: முல்லைக் கருப்பொருள்.

5. பொ-ரை: கங்கைநதி, வில்வம், பிறைமதி, வெள்ளெருக்கு, கொன்றை மலர் நிறைந்த மாலை, குளிர்ந்த கரந்தை ஆகியவற்றைச் சடையின்கண் அணிந்த தத்துவனாகிய சிவபிரான் தங்கியுள்ள கோயிலையுடையது, மேகமண்டலம் வரை உயர்ந்து சென்று வானத்தை அளந்து மணம் பரப்பும் பொழில்கள் சூழ்ந்ததும், மணம் வீசும் வீடுகளை உடைய தேரோடும் வீதிகளில் அரங்குகளில் ஏறி அணிகலன்கள் புனைந்த இளம் பெண்கள் நடனம் ஆடுவதுமாகிய திருவையாறாகும்.

கு-ரை: கங்கையோடு வில்வம் எருக்கம்பூ முதலியவற்றைச் சடையிலணிந்த தத்துவனார் தங்குங் கோயில், மேகமண்டலத்தை யளாவி, விண்ணையளந்த பொழில்கள் சேர்ந்துள்ள தேரோடும் வீதியிலே உள்ள அரங்குகளில் மகளிர் நடமாடும் ஐயாறு என்கின்றது. கூவிளம் - வில்வம். கார் ஓடி - மேகம் பரந்து.