சேறாடு செங்கழுநீர்த் தாதாடி
மதுவுண்டு சிவந்தவண்டு
வேறாய வுருவாகிச் செவ்வழிநற்
பண்பாடும் மிழலையாமே. 7
1423. கருப்பமிகு முடலடர்த்துக்
காலூன்றிக்
கைமறித்துக் கயிலையென்னும்
பொருப்பெடுக்க லுறுமரக்கன்
பொன்முடிதோள்
நெரித்தவிரற் புனிதர்கோயில்
தருப்பமிகு சலந்தரன்ற னுடல்தடிந்த
சக்கரத்தை வேண்டியீண்டு
விருப்பொடுமால் வழிபாடு செய்யவிழி
விமானஞ்சேர் மிழலையாமே. 8
_________________________________________________
பார்வதிதேவி தன் ஒரு கூறாக விளங்கத்
திகழும் திருமேனியை உடையவனும், கூத்தாடும்
குணமுடையவனும், ஆகிய சிவபிரான் மனங் குளிர்ந்து
எழுந்தருளியிருக்கும் கோயில், சேற்றில் முளைத்த
செங்கழுநீர் மலர்களின் மகரந்தங்களில் படிந்து
தேனையுண்டு, தன் இயல்பான நிறம் மாறிச் சிவந்த
நிறம் உடையதாய்த் தோன்றும் வண்டு செவ்வழிப்
பண்ணைப் பாடிக் களிக்கும் திருவீழிமிழலையாகும்.
கு-ரை: ஆறுசேர் முடியன், அனல்சேர்
கையன், உமையொரு கூறன். கூத்தன்கோயில்,
செங்கழுநீர்ப்பூவின் மகரந்தத்தில் ஆடி,
தேன்குடித்துச் சிவந்த வண்டு வேற்றுவடிவுகொண்டு
செவ்வழிப் பண்ணைப்பாடும் மிழலையாம்
என்கின்றது. தாது - மகரந்தம்.
8. பொ-ரை: கர்வம் மிகுந்த உடலை
வருந்தி நெருங்கிச் சென்று காலை ஊன்றிக் கைகளை
வளைத்துக் கயிலை என்னும் மலையைப்
பெயர்த்தெடுக்க முற்பட்ட அரக்கனாகிய
இராவணனின் பொன்முடி தரித்த தலைகளையும்
தோள்களையும் நெரித்து அடர்த்த கால் விரலையுடைய
தூயவராகிய சிவபிரானார் உறையும் கோயில்,
செருக்கு மிக்க சலந்தரன் என்னும் அவுணனது உடலைத்
தடிந்த சக்கராயுதத்தைப் பெற விரும்பிப்
பெருவிருப்போடு இவ்வுலகில் திருமால் வழிபாடு
செய்ததும், வானிலிருந்து இழிந்த விமானத்தை
உடையதுமாகிய திருவீழிமிழலையாகும்.
|