1424. செந்தளிர்மா மலரோனுந் திருமாலும்
ஏனமோ டன்னமாகி
அந்தமடி காணாதே யவரேத்த
வெளிப்பட்டோ னமருங்கோயில்
புந்தியினான் மறைவழியே புற்பரப்பி
நெய்சமிதை கையிற்கொண்டு
வெந்தழலின் வேட்டுலகின் மிகவளிப்போர்
சேரூமூர் மிழலையாமே. 9
_________________________________________________
கு-ரை: கயிலையை எடுக்கலுற்ற
இராவணனை நெரித்த விரலையுடைய பெருமான்கோயில்,
சலந்தரன் உடலையழித்த சக்கரத்தைத் திருமால்
வழிபட்டுப்பெற்ற திருவீழிமிழலை என்கின்றது.
கருப்பமிகும் உடல் - கருவம் மிகுந்த
உடல் என்றது அப்பிராகிருதமான
கயிலையைத்தீண்டும் உரிமையுங் கூட, பிராகிருத
மேனி தாங்கிய இவற்கில்லை என்பது,
உணர்த்தியவாறு.
தருப்பம் - செருக்கு, மால் வழிபாடு
செய்த வரலாறு இத்தலத்து நிகழ்ச்சி. இழிவிமானம்
- விண்ணிழி விமானம். இது இத்தலத்து விமானம்.
9. பொ-ரை: சிவந்த இதழ்களையுடைய
பெரிய தாமரை மலரின்மேல் உறையும் பிரமனும்,
திருமாலும் அன்னமாகியும் பன்றியாகியும்
முடியடிகளைக் காணாது தம் செருக்கழிந்து வழிபட
அவர்கட்குக் காட்சி அளித்தோனாகிய சிவபிரான்
அமரும் கோயில். தாங்கள் பெற்ற அறிவால் வேத
விதிப்படி தருப்பைப் புற்களைப் பரப்பி நெய்,
சமித்து ஆகியவற்றைக் கையில் கொண்டு அழல்
வளர்த்து வேள்வி செய்து உலகைக் காப்பவர்களாகிய
அந்தணர்கள் சேரும் ஊராகிய திருவீழிமிழலையாகும்.
கு-ரை: அயனும் மாலும், அன்னமும்
ஏனமுமாகித் தேடியறிய முடியாது வணங்க வெளிபட்ட
இறைவன்கோயில், வேதவிதிப்படி
தருப்பையைப்பரப்பி, நெய் சமித்து
இவைகளைக்கொண்டு வேள்வி செய்து, உலகைக்காக்கும்
அந்தணர் வாழும் மிழலையாம் என்கின்றது. அந்தம் -
முடி. புந்தியினா - அறிவால். வேட்டு - வேள்வி செய்து.
|